‘நேரம்' நடிகருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் புகாரில் சிக்கிய நிவின் பாலி

மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sep 4, 2024 - 01:29
Sep 4, 2024 - 15:34
 0
‘நேரம்' நடிகருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் புகாரில் சிக்கிய நிவின் பாலி
நிவின் பாலி மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மிகுந்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

அந்த அறிக்கையில் மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. படப்பிடிப்பிற்கு செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்கு செல்லும் இடங்களில் நடிகர்கள் விடுதி அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு மோசமான நிலைமை இருந்தும் இதுகுறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாகவும், சமூகத்தில் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பாலியல் சுரண்டலில் ஈடுபவர்களுக்கு எதிராக பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை என்றெல்லாம் ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லால் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’-வில் இருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். இவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாலியல் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் புகாரளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அந்த வகையில், நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குநர் ரஞ்சித் மீதும், நடிகை ரேவதி சம்பத், நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் குற்றம் சாட்டினார்.

நடிகை மினுமுனீர் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித், சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் குற்றத்தை மறுத்த நிலையில், இருவரும் தங்கள் வகிக்கும் பதவிலிருந்தும் விலகியிருந்தனர். மேலும், கேரள சட்டமன்ற உறுப்பினரான ஏ முகேஷ் கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

மலையாள திரையிலகில் முன்னணி நடிகர்கள் பலரும் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில், தமிழில் நேரம் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் நிவின் பாலியும் தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நேரியமங்கலத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார். இது குறித்து, எர்ணாகுளம் பகுதியில் உள்ள, ஒன்னுக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், நிவின் பாலி ஆறாவது குற்றவாளியாகவும், தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரில் ஸ்ரேயா என்ற பெண்ணும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக ஸ்ரேயா சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பரில் நடிகர் நிவின் பாலியை திரைப்பட விவாதத்திற்காக, ஸ்ரேயா துபாய்க்கு அழைத்ததாகவும், அங்கு வைத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, இந்த புகாரை விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow