சினிமா

சிரிப்பதற்கும் அழுவதற்கும் தயாராகுங்கள்... வாழை திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகவுள்ள வாழை திரைப்படத்திற்காக நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்தி வாழ்த்தியுள்ளனர்.

சிரிப்பதற்கும் அழுவதற்கும் தயாராகுங்கள்... வாழை திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ்!
“மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” - நெகிழ்ச்சி தெரிவித்த கார்த்தி

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவரது அடுத்த படமான வாழை நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்காக மாரி செல்வராஜுக்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது X தளத்தில், “மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் நாளை வெளியாகிறது. சிரிப்பதற்காகவும், அழுவதற்காகவும், கை தட்டி கரகோஷங்களை எழுப்புவதற்காகவும் தயாராக இருங்கள். உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தக்கூடிய ஒரு ஆழமான கதைக்குள் பயணிக்க தயாராகிக்கொள்ளுங்கள். உலக அளவில் இருக்கும் சினிமா ரசிகர்களாள் ‘வாழை’ திரைப்படம் கொண்டாடப்படப்போகிறது. மாரி செல்வராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஓம் நம சிவாய” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 

இதற்கு, “என் மீதும் என் படைப்புகளின் மீதும் தொடரும் உங்கள் ப்ரியத்திற்கு எப்போதும் என் நன்றியும் அன்பும் சார்” என மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது X தளத்தில், “நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க: 'பட்டால் தான் விஜய்க்கு தெரியும்'.. சட்டென சொன்ன கார்த்தி சிதம்பரம்!

இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன், “மாரி செல்வராஜ் உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது வாழை திரைப்படத்தில் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காக காத்திருக்கிறேன். மனதைக் கவரும் வாழை திரைப்படத்தை தயாரித்ததற்காக திரைப்படக் குழுவுக்கு எனது பாராட்டுகள்” என தனது X தளத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.