புதுக்கோட்டை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கு முன்பு பிரம்மாண்ட மாநாடு நடத்த இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்தார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் இன்று காலை தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அதனைத் தொடர்ந்து அலுவலகத்திலும் கொடியை பறக்கவிட்டார். மேலும் கட்சியின் பாடலையும் வெளியீடு செய்தார். இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, அம்மா ஷோபா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விஜய்யின் தவெக கொடி, கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன.
ஆனால் விஜய் கொடியை பகுஜன் சமாஜ் கொடி போல் இருப்பதாகவும், கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் லோகோ போல் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், ''விஜய் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நீட் தேர்வு , GST உள்ளிட்ட விவகாரங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை நடிகர் விஜய் தெரிவிக்க வேண்டும்.
இதேபோல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். வெறும் கட்சியை அறிவித்துவிட்டு கொடியை வெளியிட்டு விட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் பத்தாது. எல்லோருக்கும் தான் தமிழ் பற்று. தேச பற்று உள்ளது,
எனக்கும் தான் தேசிய பற்று,தமிழ் பற்று உள்ளது. ஆகவே தனது கொள்கை என்ன என்பதை விஜய் விவரிக்க வேண்டும்.
விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்தியதை மட்டும் வைத்து நான் எந்த கருத்தும் கூற முடியாது. தனியாக கட்சி நடத்துவது எவ்வளவு சிரமம்? என்பது பட்டால் தான் விஜய்க்கு தெரியும். அவரும் பட்டு தெரிந்து கொள்வார்'' என்று கூறியுள்ளார்.