ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. 8 பேர் கைது.. ராஜீவ்காந்தி மருத்துவமனை முன் பதற்றம்.. போலீஸ் குவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Jul 6, 2024 - 07:01
Jul 8, 2024 - 13:05
 0
ஆம்ஸ்ட்ராங் படுகொலை..  8 பேர் கைது.. ராஜீவ்காந்தி மருத்துவமனை முன் பதற்றம்.. போலீஸ் குவிப்பு
8 People Arrested on Armstrong Murder Case

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று இரவு ( ஜூலை 5) தனது வீட்டின் வெளியே அண்ணன் வீரமணி (65), பாலாஜி (53) ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் போல  சீருடையில் 8 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி வந்தனர். வழக்கமாக உஷாராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என்று நினைத்து அசால்டாக நின்று பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த கும்பல் திடீரென பைகளில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது.  ஆம்ஸ்ட்ராங் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் வெட்டு விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அருள்தாஸ் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், அவரது வீடு உள்ள பகுதி மற்றும் அப்போலோ மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அதேநேரத்தில் அவரது வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தக் கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், இணை கமிஷனர் அபிஷேக் தீக்சித், துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கொலையாளிகளை  பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  கொலையாளிகள் பயன்படுத்திய பட்டா கத்தியை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில்  அதனைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கொலை சம்பவம் நடந்தவுடன் சென்னை நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக , சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன்,சந்தோஷ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்களையும் ரகசிய இடங்களில் வைத்து காவல்துறை
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பாக கூடியுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow