கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்.. ஆம்ஸ்ட்ராங் அரசியல் பயணம்.. அமாவாசையில் ஸ்கெட்ச் போட்ட கும்பல்

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது. இந்த கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கான பின்னணி குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Jul 6, 2024 - 07:40
Jul 8, 2024 - 13:04
 0
கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்.. ஆம்ஸ்ட்ராங் அரசியல் பயணம்.. அமாவாசையில் ஸ்கெட்ச் போட்ட கும்பல்
BSP Armstrong Murder Case Details in Tamil

சென்னையை பூர்வீகமாக கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை, தீவிர பெரியாரிய மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்தார். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் ஆம்ஸ்ட்ராங்.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்தன. ரவுடிகள் பட்டியலில் அவரும் இருந்தார். பின்னர் அதில் இருந்து முற்றிலும் விலகிய அவர், 2000 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்க், 2006ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்  சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் ஆம்ஸ்ட்ராங்.  சென்னை மாமன்ற உறுப்பினராக ஆம்ஸ்ட்ராங் பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக, போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி, சரியான ஊதியம், பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுமார் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.

2007 ஆம் ஆண்டில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.  மாயாவதிக்கு நெருக்கமானவராக இருந்து வந்தார் ஆம்ஸ்ட்ராங்.

ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். நீட் தேர்வு ரத்து கோரியும், சிறுபான்மையினர் பாதுகாப்புக்காகவும், தலித் மக்களின் நலன் காக்கவும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தலித் அமைப்புகளுடன் இணக்கமாக அரசியல் பணியாற்றி வந்தார். 17 ஆண்டுகளாக தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தார். 

ஆரம்பத்தில், மேடையில் பேசுவதற்கே சிரமப்பட்ட ஆம்ஸ்ட்ராங், போகப் போக கட்சிக் கொள்கைகளை மேடைகளில் மிகத் தீவிரமாக பேசி வந்தார்.  தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் பட்டியலின சமூக மக்கள் படும் பிரச்னைகள் குறித்து மிக ஆழமாகவும் தீவிரமாகவும் பேசி வந்தார் ஆம்ஸ்ட்ராங். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர்மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டின் முன்பாகவே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங். இந்த கொலைக்கான பின்னணி குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று முறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அது தொடர்பாக அவரை கவனமாக  இருக்கும்படியும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ரங்கை ஒரு கும்பல் கண்காணித்து வந்திருக்கிறது. அந்த கும்பல் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை பொருத்தவரை கட்சிப் பணியில் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்தார். அதோடு சில அரசியல் விவகாரங்களிலும்  தலையிட்டு வந்தார். அதனால் எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கும்பல் இருக்கும். அந்த கும்பலில் உள்ளவர்களும் பாதுகாப்புடன் தான் இருப்பார்கள். அதையெல்லாம் தெரிந்த ஒரு கும்பல் தான் ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் அண்ணா நகர் துணை ஆணையர் முன்னிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் சரணடைந்தனர். அவர்கள் எட்டு பேரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில், டெய்லர் செந்தில், ஜான் கென்னடி, ஜெயசந்திரன், சைதை சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பாம்சரவணன் என்ற ரவுடியும் சம்பவ இடத்துக்கு வந்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். 

பாம்சரவணனுடன், ஆம்ஸ்ட்ராங்கும், காரில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்ததாகவும், காரில் அவர் இருப்பதுபோல காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆம்ஸ்ட்ராங்க் கைது செய்யப்படவில்லை.
அவருக்கும் வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி அஞ்சலை மகன் பாலு, முருகேசேன் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங்க்கை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்தே உணவு டெலிவரி செய்வது போல வந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  கைதான ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்களையும் ரகசிய இடங்களில் வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அமாவாசை நள்ளிரவில் பலரது தூக்கத்தை தொலைத்து விட்டது என்றே கூறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow