நீலகிரியில் கனமழை.. சூறைக்காற்று எதிரொலி.. 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Holiday Annouced in Nilgiris : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Holiday Annouced in Nilgiris : தமிழ்நாட்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் பத்திரமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் நீலகிரி மாவட்டத்தில் அதீத காற்று வீசி வருவதால், பல ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. கொட்டும் மழையிலும் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடையும், உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதோடு, மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 4 வட்அடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (22.07.2024) மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், “சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று முதல் ஜூலை 24 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?