“சாப்பிட்டா குண்டாயிடுவேனா?” - உயிருக்கே பாதகம் விளக்கும் அனோரக்சியா நெர்வோஸா

சாப்பிட்டால் உடல் பருமன் கூடி விடுமோ என்கிற பயத்தில் சாப்பாட்டையே வெறுக்கும் மன நலப் பிரச்னையான அனோரக்சியா நெர்வோஸா குறித்து விரிவாக விளக்குகிறார் உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.

Sep 5, 2024 - 18:25
 0
“சாப்பிட்டா குண்டாயிடுவேனா?” - உயிருக்கே பாதகம் விளக்கும் அனோரக்சியா நெர்வோஸா
anorexia nervosa

உடல் பருமன் இல்லாமல் ஸ்லிம் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. நமது வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடல் பருமனுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இப்படியான சூழலில் உணவுப்பழக்கத்தை முறைப்படுத்தி, உடற்பயிற்சி மேற்கொண்டு உடற்பருமனைக் கட்டுப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அரிதாக சிலர் சாப்பிடுவதால்தான் உடல் எடை கூடுகிறது என்பதால் அதிகம் சாப்பிடக்கூடாது என்கிற முடிவுக்கு வருவார்கள். இது நாளடைவில் தீவிரமாகி உடலுக்குத் தேவையான உணவைக்கூட எடுத்துக் கொள்ளாமல் போவார்கள். இது ஒரு மனப்பிரச்னையாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. அப்படி ஆகி விட்டால் எதுவும் சாப்பிடாமல் ஊட்டச்சத்தின்றி மிகவும் மோசமான நிலைக்குச் செல்வார்கள். இந்த மன நலப் பிரச்னை குறித்து விளக்குகிறார் மன நல மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி... 

‘‘eating disorder-ன் ஒரு பகுதியான anorexia nervosa என்கிற உளவியல் பிரச்னைக்கு ஆளானவர்கள் நாம் குறிப்பிடுவதைப் போல அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்பட்டு விடும், தனது அழகு பாழாகி விடும் என்பதற்காக மிகக் குறைந்த அளவே சாப்பிடுவார்கள். இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து ஏதும் கிடைக்கப் பெறாமல் மெலிந்து போய் இறுதியில் இறப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. bulimia nervosa என்பது இன்னொரு வகையான eating disorder. இதற்கு ஆளானவர்கள், நன்றாக சாப்பிட்டு விடுவார்கள் ஆனால் உடல் பருமன் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்து விடுவார்கள். இது போன்ற பிரச்னைகள் பெரும்பாலும் நடிகைகள், மாடல்களுக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு உடல் தான் மூலதனமே. உடல் பருமனாகி விட்டால் தங்களது அழகு போய்விடும் என்றும் அழகு போய் விட்டால் தங்களுக்கான மார்கெட் போய்விடும் என்கிற பதைபதைப்பில் இப்பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

நடிகைகள் என்றல்ல பொதுவாக யாருக்கு வேண்டுமானாலும் இப்பிரச்னை வரலாம். ஆனால் இப்பிரச்னைக்கு ஆளாகுபவர்கள் மிகவும் அரிது. உடல் எடை கூடி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதில் தவறொன்றுமில்லை அதற்காக ஊட்டச்சத்து குறைபட்டுப் போகுமளவுக்கு நடந்து கொள்வதுதான் தவறானது. போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு, உடல் பருமனடையாமல் இருக்க உடற்பயிற்சிகள் மேற்கொள்வதுதான் சிறந்ததோ தவிர சாப்பாட்டைத் தவிர்ப்பது உயிருக்கு உலை வைக்கும் செயல் ஆகும்.

உங்கள் கட்டுப்பாட்டை மீறி அந்த எண்ணங்கள் உங்களை ஆழத்துவங்கினால் உடனே மனநல மருத்துவரை அணுக வேண்டும். உங்களுக்கு anorexia nervosa இருப்பது உறுதி செய்யப்பட்டால் உளவியல் மற்றும் ஊட்டச்சத்துக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மனதிலிருக்கும் ஆழமான எண்ணங்களை மாற்றும் coginative behavior therapy, ஆற்றுப்படுத்துதல் மற்றும் மருந்து, மாத்திரைகள் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.” என்கிறார். 

எல்லாவற்றுக்கும் அதனதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. உடல் பருமனைக் கட்டுப்படுத்த உணவு மட்டுமல்ல போதிய உறக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை என பல அம்சங்கள் தேவை. அவற்றை முறையாகத் தெரிந்து கொண்டு உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்ள முயன்றால் எந்தத் தவறும் இல்லை. 

- கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow