சென்னை விமான நிலையத்திற்கு பாங்காங் நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் விலை உயர்ந்த ஓஜி கஞ்சா பொருட்களை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் கஞ்சா வாங்க சென்ற 2 நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சென்னை புழலைச் சேர்ந்த பரூக், கொடுங்கையூரை சேர்ந்த முகமது யூசுப், ஆருண் ஆகியோர் என்பது தெரிந்தது. கைதான பரூக், பாங்காங் நாட்டிற்கு சென்று, அங்கு பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அல்அமீன் என்பவரிடம் உலர்ந்த கஞ்சாவான ஓஜி கஞ்சாவை விமானத்திலேயே கடத்தி வந்தது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ஓஜி கஞ்சாவின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேரிடம் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இது குறித்த விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தாய்லாந்தில் இருந்து விலை உயர்ந்த கஞ்சாவை கடத்தி வந்து சப்ளை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டவைகள் தாய்லாந்தில் விளையும் விலை உயர்ந்த கஞ்சா என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சா, 100 கிராம் ஒரு லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.