ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது.. தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறி விட்டதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டினார்கள். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நேற்று இரவு பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை கைது செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கள்ளக்காதலி என கூறப்படும் புளியந்தோப்பு அஞ்சலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது ஏற்கெனவே கைதாகியுள்ள அருளுக்கு உடந்தையாக இருந்த ஹரிதரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார்.
அருளின் நெருங்கிய நண்பரான ஹரிதரன் அருளின் செல்போனை மறைத்து வைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அருளுக்கு உடந்தையாக இருந்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் தாங்கள் பயன்படுத்திய செல்போன் உபகரணங்களை துண்டு, துண்டாக உடைத்து வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். தற்போது ஹரிஹரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே ஹரிதரன் கொலை வழக்கில் சிக்கியுள்ளதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?






