'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

Jul 21, 2024 - 02:24
Jul 21, 2024 - 12:27
 0
'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
pa ranjith speech about armstrong case

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பே நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், நீலம் பண்பாட்டு மையம் சார்பில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்  பேரணி சென்னையில் இன்று நடந்தது. சென்னை எழும்பூர் லென்ஸ் கார்டன் சாலையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை நடந்த இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்றனர். இதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் பேரணியில் பங்கேற்றனர். 

பின்னர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- காசு கொடுத்து உங்களை யாரும் இங்கு யாரும் வரவில்லை. ஏனெனில் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது.   

திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதுகின்றனர். பட்டியலின மக்களின் உரிமை குறித்து பேசினால் பி டீம் என கூறுகின்றனர். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். நாங்கள் எப்போதும் பாஜகவுக்கு நேர் எதிரானவர்கள். 

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை.

ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். காவல்துறை விசாரணையை நாங்கள் நம்புகிறோம். ஆனால் உண்மையான குற்றவாளிகளை கண்டறியாவிட்டால் காவல்துறைக்கு நிர்பந்தத்தை உருவாக்குவோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளன. சென்னையில் ஆம்ஸ்ட்ராங்கை மீறி எதுவும் நடக்காது. ஆம்ஸ்ட்ராங் இல்லையென்று  யாரும் ஜாலியாக இருந்து விடாதீர்கள். சென்னையில் எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. 

சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளனர். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை வரும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவர் இந்து மதத்திற்கு எதிராக போராடியவர். பௌத்த மதத்தை  தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர். 

அவர் பௌத்ததிற்கு மாறிய பிறகு, அவருடன் அதிகமான நபர்களை வைக்க தவித்தார். இந்த பௌத்தத்தின் சூழலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரியா ராஜன் எப்படி மேயர் ஆனோம். கயல்விழி செல்வராஜ் எப்படி அமைச்சர் ஆனோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பிரியா ராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை. இடஒதுக்கீடு இருந்ததால்தான் பிரியா ராஜன் மற்றும் கயல்விழி செல்வராஜ் இருவருக்கும் உயரிய பதவிகள் கிடைத்துள்ளன. ஆனால் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை? நீங்கள் திமுகவில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா?

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக குரல் கொடுப்பீர்கள்? அப்படி குரல் கொடுக்கவில்லை என்றால்  பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். நாங்கள் ஒண்ணும் அடிமை இல்லை. எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்.

திருமாவளனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். திருமாவளவனை ஒருபோதும் விட்டு விடமாட்டோம். அவருடன்தான் நாங்கள் இருப்போம். உங்கள் பின்னாடி சும்மா அவர் இருக்கிறார் இவர் இருக்கிறார் என்று பிம்பத்தை உருவாக்காதீர்கள். தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா?

நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள். எங்கள் தலைவர் இறந்த உடனே அவரை ஊருக்கு வெளியில் அடக்கம் பண்ணுவது தான் உங்க திட்டமா?

சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். ஆம்ஸ்ட்ராங்குக்கு சென்னையில் மணி மண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும். திமுக, அதிமுக அனைத்து கட்சிகளுமே எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை. இட ஒதுக்கீடு மூலம் மூலம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஆனவர்கள் எங்கள் பிரச்சனையை ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள்.

எங்களின் குரல்களை கேட்கவில்லை என்றால் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களை முற்றுகையிடுவோம். சும்மா விடமாட்டோம். மற்ற சாதி பிரச்சனைகளும், தலித் சாதி பிரச்சனைகளும் வேறு வேறு; இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். இதேபோல் உயர்சாதி அடக்கு முறையும், எஸ்.சி-எஸ்.டி அடக்கு முறையும் வேறு வேறு. ஆம்ஸ்ட்ராங்குக்கு பிறகு தலித் மக்களின் கோரிக்கைகளை பிரச்சனைகளை நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும். இவ்வாறு பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow