ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. பா.ரஞ்சித் முதல் அட்டகத்தி தினேஷ் வரை.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Jul 20, 2024 - 22:41
Jul 20, 2024 - 22:52
 0
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. பா.ரஞ்சித் முதல் அட்டகத்தி தினேஷ் வரை.. பங்கேற்றவர்கள் யார்? யார்?
Armstrong Memorial Rally

Armstrong Memorial Rally : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை நகரில் அதுவும் காவல் நிலையம் அருகில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் அனைவரது மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக பிரபலமான ரவுடிகள் உள்பட முக்கிய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் மறைவு தொடர்பாக பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ்நாடு அரசை கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அறிக்கை வெளியிட்ட அவர்,   ''ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் மூலம் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு உண்மையான சமூகநீதி இல்லை. திமுக அரசு வெறும் வாக்குகளுக்கு மட்டும்தான் சமுகநீதி பேசி வருகிறது'' என்று குற்றம்சாட்டி இருந்தார். இதன்பிறகு பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் பரவியது.

ஆனால் இதை மறுத்த பா.ரஞ்சித், ''பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவில்லை. நான் இப்போதே எனது படங்கள் மற்றும் செயல்கள்மூலம் அரசியல்தான் பேசி வருகிறேன்'' என்று விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், நீலம் பண்பாட்டு மையம் சார்பில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்  பேரணி சென்னையில் இன்று நடந்தது. சென்னை எழும்பூர் லென்ஸ் கார்டன் சாலையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை நடந்த இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்றனர். இதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் பேரணியில் பங்கேற்றனர். 

பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow