தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்..? திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

சென்னையில் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்..? திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெருமாள் கோயில் தெரு பகுதியைச்  சேர்ந்த தினேஷ்- பார்வதி தம்பதியரின் 4 வயது மகனான ரோகித் என்ற சிறுவனுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இந்த நிலையில்  சென்னை அயனாவரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிறுவன் ரோகித் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
 
சிகிச்சையில் இருந்த மாணவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் உயிரிழந்த ரோகித்தின் உடலை பெற்றுக் கொண்டு பொன்னேரிக்கு சென்றுள்ளனர். பின்னர் சில மணி நேரத்தில், உறவினர்கள் சிலருடன் அச்சிறுவனின் பிரேதத்துடன் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திடீரென பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி.. காரணம் என்ன?

மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் தான் சிறுவன் ரோகித் உயிரிழந்து விட்டதாகவும்,  சிறுவனுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் செல்போனில் வீடியோ கால் மூலமாக பணியில் இருந்த மற்றொரு மருத்துவர் மூலம் சிகிச்சை வழங்கியதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாக சிறுவன் உயிரிழந்தப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினருக்கும், சிறுவனின் உறவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. சிறுவன் ரோகித்தின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதின் காரணமாக அயனாவரம் கே. எச் சாலையில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக தமிழகத்தில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்று புகார் எழுப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வீடியோ கால் மூலமாகவும், தங்களது உதவி மருத்துவர்கள் மூலமாகவும் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களுக்கும் சமூக வலைதளத்தில் வைரலாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.