திடீரென பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி.. காரணம் என்ன?

கரூர் அருகே தனியார் பள்ளியின் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Feb 18, 2025 - 17:09
 0
திடீரென பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி.. காரணம் என்ன?
பள்ளி மாடியில் இருந்து மாணவி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கரூர் அடுத்த ஆச்சிமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மாணவி நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால்,  இன்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று பிற்பகல் 2.20 முதல் 2.30 மணி வரை இடைவேளை நேரம் விடப்பட்ட நிலையில், வகுப்பின் 8-வது பீரியடில் கழிவறை செல்ல வேண்டும் என்று மாணவி கேட்டுள்ளார். ஆசிரியரும், சக மாணவர்களும் தடுத்த நிலையில் அவசரமாக செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

கீழ்த்தளத்தில் செயல்படும் மாணவியின் வகுப்பிலிருந்து மாடி படிக்கட்டு ஏறி இரண்டாவது தளத்தில் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, சுவர் ஏறி குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தை சக மாணவர் ஒருவர் பார்த்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியாக விளையாட்டு சான்றிதழ் ஒன்று கிழிக்கப்பட்டதாகவும், அதற்கு இந்த மாணவிதான் காரணம் என ஆசிரியர் ஒருவர் கண்டித்ததோடு, பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரச் சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கூட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று  பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாந்தோணிமலை போலீசார் பள்ளி முதல்வர் ரமணி சேதுராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவியின் மருத்துவ அறிக்கைகள் இன்று மாலை வெளியான பின்னரே அவரின் உடல்நிலை குறித்து தெரியவரும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறியதாக பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து பள்ளி முதல்வர் ரமணி சேதுராமனிடம் விளக்கம் கேட்டபோது, பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை எனவும், முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் மட்டும் அறிவியல் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது தளம் முற்றிலுமாக செயல்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow