விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நடைபெறும் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதனை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா, கடந்த வாரம் 4ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது.
முன்னதாக இந்த மாநாடு கடந்த மாதம் 23ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக செப்.23ம் தேதி நடைபெறவிருந்து மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அக்.27ம் தேதி தவெக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, மீண்டும் உரிய விளக்கங்களுடன் மாநாட்டுக்கு அனுமதி வாங்கியது தமிழக வெற்றிக் கழகம். தற்போது மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தவெக மாநாடு நடைபெறும் இடத்தை விழுப்புரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் திரிஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாட்ச் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
தவெக மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் உள்ளே வரும் வழி, பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள், விஜய் எந்த வழியில் வருவார், மேடையில் எவ்வளவு நேரம் அமர்வார், எப்போது பேசுவார் என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகள் தகவல்கள் கேட்டறிருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், தென்மாவட்டங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து சென்னை வரும் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும், வேறு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றியும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்ததாக தெரிகிறது.
தவெக மாநாடு 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அடுத்த 3 தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், அங்கிருந்து சென்னை வரவும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான இடமாக உள்ளது. இதனால், தவெக மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளிலும், போக்குவரத்து மாற்றம் செய்வதிலும் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தவெக தொண்டர்கள் எந்தளவிற்கு சப்போர்ட் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பாட்டுள்ளது.