மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காமராஜரின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு அதே வளாகத்தில் உள்ள காமராஜரின் உருவ சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் புகழஞ்சலியும் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டதில் 10 சதவீத வாக்கு குறைந்துள்ளது என்று எடப்பாடி கூறியது குறித்த கேள்விக்கு, “வெளியில் பேசுகிற விஷயங்கள் குறித்து கருத்து கூறலாம். அரங்குக்குள் பேசுகிற விஷயம் குறித்து கருத்து கூற முடியாது. நிர்வாகிகளை ஊக்குவிப்பதற்காக கூட கூறியிருக்கலாம். இந்த கருத்து விவாதத்திற்கு உரிய பொருள் அல்ல” என பதில் அளித்தார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்பாக திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடிக்கும் கதையாக அராஜகத்தின் உச்சகட்டமாக இருக்கிற திமுக நீதிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பா? நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பா? என்று நீதிமன்றத்தை அவமரியாதை செய்தவர் கருணாநிதி. இவர்களை பொறுத்தவரை ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் இல்லை, பத்திரிக்கை துறை இல்லை. இவர்கள் வைத்ததுதான் சட்டம் என மன்னர் ஆட்சி போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அழிவுக்கு உண்டான காலத்தை நோக்கி திமுக சென்று கொண்டிருக்கிறது என்பதின் வெளிப்பாடாக வில்சனின் செயல்பாடு உள்ளது” என்றார்.
மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறக்கணித்த விசிக தலைவர் திருமாவளவன் குறித்த கேள்விக்கு, “காந்தி ஜெயந்தி அன்றே கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் காய்ச்சிய ஒருவரை பிடித்திருக்கிறார்கள். விசிக நடத்துகிற மாநாட்டில் திமுக கலந்து கொள்வது ஜீவகாருண்யம் மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போன்று” எனக் கூறினார்.
மேலும் படிக்க: BREAKING | மாபெரும் மனித சங்கிலி போராட்டம்... அதிமுக அறிவிப்பு!
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், “வானிலை ஆராய்ச்சி மையம் மழை இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும் என தெளிவுபடுத்தி இருக்கிறது. ஒரு உயிர் கூட போக விடமாட்டேன் என்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பேசி முடிப்பதற்குள் ஒரு உயிர் போய்விட்டது. ஒரு திட்டமிடுதல் இல்லாமல் சாலைகள் தோண்டப்பட்டு இருக்கிறது. விருகம்பாக்கம் தொகுதியில் அங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு இருக்கின்றன. மழைக்காலத்தில் மழை நீர் கால்வாய் பணிகளை யாராவது செய்வார்களா? அறிவுள்ள எந்த அரசும் இதை செய்யாது” என விமர்சித்துள்ளார்.