அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்கு பாலியல் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தன்னை கடந்த திங்கட்கிழமை இரவு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது ஒருவர் கைதாகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னை அடையாறில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் அண்ணாமலை பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பெண் குழந்தைகளை செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் இணைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழா இன்றிலிருந்து ஆரம்பமாகி இருக்கிறது.இந்த நிகழ்வை ஆண்டு முழுவதும் கொண்டாட இருக்கிறோம். அதன் முதல் நிகழ்ச்சியாக பத்து வயதிற்குட்பட்ட ஒரு லட்சம் பெண் குழந்தைகளுக்கு முதல் தவணையாக ஆயிரம் ரூபாய் செலுத்தி கணக்குத் தொடங்கி வைக்க உள்ளோம். அவர்கள் 15 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தும் போது இறுதியில் ஒரு பெரிய தொகை கிடைக்கும். தமிழகம் முழுவதும் இதைச் செய்ய இருக்கிறோம் என்றார்.
தமிழகத்தில் கேட்காத விஷயங்கள் எல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. நிர்பயாவுக்கு ஏற்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை முதலில் கேள்விப்பட்டோம். கிராமங்களில் எல்லாம் பாலியல் வன்கொடுமைகளை கேள்விப்படத் தொடங்கினோம். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற சென்னையில் பாதுகாப்பான இடத்தில், நேற்று இரவு ஒரு மாணவனும் மாணவியும் மரங்கள் அடர்ந்த பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது மரபணு அவர்கள் இரண்டு பேர் அந்த மாணவனை அடித்துவிட்டு, அந்த மாணவியை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை கேட்டிராதவற்றை கேட்பதினால் ரத்தம் கொதிக்கிறது. ஒரு மாணவிக்கு தமிழகத்தின் தலைநகரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இது நடக்கிறது என்றால், சாதாரண குழந்தைகளின் நிலைமை நினைத்துப் பாருங்கள். அங்கு இருக்கக்கூடிய எந்த சிசிடிவியும் வேலை செய்யவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. முதலமைச்சர் உறங்கிக் கொண்டிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு குற்றம் நடக்கும் போதும், முன்னாள் நடந்த குற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது. எந்த குற்றம் செய்பவருக்கும் பயத்தை ஏற்படுத்தாத சட்டம் ஒழுங்கை வைத்திருக்கிறோம். காவல்துறையில் அரசியலை கலந்துவிட்டீர்கள். அதனால் காவல்துறை செயலிழந்து கிடக்கிறது.
இந்த சம்பவமே தமிழகத்தில் நடக்கும் முதலும் கடைசியுமானதாக இருக்க வேண்டும். இதற்கு மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள் இரண்டு பேர் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்றால் என்ன தைரியம் இருக்க வேண்டும். செயலிழந்து இருக்கும் தமிழக அரசு இனியாவது தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
What's Your Reaction?