டிஎஸ்பி காதர் பாட்ஷா கோடி கணக்கில் பணப் பட்டுவாடா.. சிலை கடத்தல் விவகாரத்தில் பகீர் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

Sep 17, 2024 - 15:55
Sep 17, 2024 - 16:06
 0
டிஎஸ்பி காதர் பாட்ஷா கோடி கணக்கில் பணப் பட்டுவாடா.. சிலை கடத்தல் விவகாரத்தில் பகீர் குற்றச்சாட்டு
டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

போலீஸ் டிஎஸ்பி காதர் பாஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி சென்னை சிபிஐ பொன் மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்தது. அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் உத்தரவிட்டது. மேலும் 4 வாரங்கள் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி இன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் ஆஜரானார்.

பிறகு கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பொன் மாணிக்கவேல், “சிபிஐ அலுவலகத்திற்கு வந்து தற்போது கையெழுத்திட்டுள்ளேன். சட்டரீதியில் தான் சண்டையிடுவேன். காதர் பாட்ஷா, என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு வயதான குற்றச்சாட்டு. கும்பகோணம் நீதிமன்றத்தில் என் மீது வைத்த குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. காதர் பாட்ஷா மீது 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளேன். இது உண்மையான குற்றப் பத்திரிகைகள்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறார்கள். எங்களால் மறைக்க முடியும் என்று சொல்கிறார்கள். அந்த பூசணிக்காய் சுக்குநூறாக உடைக்கப்படும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் தான் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. சிபிஐயை மொத்தமாக குறை சொல்லக்கூடாது. அதில் உள்ள அதிகாரிகள் தான் தவறு செய்வார்கள்.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக நான் 3 போலீசார் (டிஎஸ்பிக்கள் காதர் பாட்ஷா, ஜீவானந்தம், காசிம்) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளேன். அதில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அமைதியாக இருக்கிறார். ஆனால் காதர் பாட்ஷா தான் பொய்யான குற்றச்சாட்டை அளித்துள்ளார்.

காதர் பாட்ஷா தான் சிலை கடத்தல்காரர்களிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து உயர் அதிகாரிகளுக்கு பட்டுவாடா செய்தவர். இவருடைய கட்டுப்பாட்டில் இருந்ததால் தான் மற்ற அதிகாரிகள் கெட்டுப்போனார்கள். 2007இல் நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு செல்வில்லை. 2017ஆம் ஆண்டுதான் வழக்கு போடுறேன்.

நடராஜர் சிலையின் கை அறுக்கப்ட்டுள்ளது. அந்த விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது. 2005ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை. இந்த வழக்கை திசை திருப்பவே என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்கில் அவர்கள் உறுதியாக வெற்றிபெற முடியாது.

நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வந்த பிறகு 2,622 சிலைகள் அமெரிக்காவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 1125 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் இருந்து எந்த சிலைகள் தகவல்களும் தரவில்லை.

சிலை கடத்தல் சம்பவங்களில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் தொடர்பு என்று காதர் பாட்ஷா உள்ளிட்டோர் பொய்யான விசாரணை அறிக்கையை கொடுத்துள்ளனர். இது அப்போதைய ஒரு டிஜிபிக்கும் தெரியும். அடுத்த சில வாரங்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். கொரனாச்சேரிக்கு செல்கிறேன்.

2.97 லட்ச ரூபாய்க்கான சிலை அங்கு திருடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளருக்கு மனசாட்சி இருக்கிறதா? என்பது தெரியவில்லை. இது குறித்து ஏற்கனவே தெரிவித்தேன். இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow