நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.. ஏன் தெரியுமா?

'' ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தொழில் அதிபர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்துள்ளார்.

Sep 13, 2024 - 09:07
Sep 13, 2024 - 09:10
 0
நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.. ஏன் தெரியுமா?
Annapurna Hotel Owner And Nirmala Sitharaman

கோவை: டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 54வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நம்கீன் எனப்படும் பிராண்ட் நொறுக்குத்தீனிகளுக்கு ஜிஎஸ்டி விகிதம் 18%ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டது. இதற்கிடையே கோவை வந்திருந்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி தொடர்பாக தொழில்துறையினரைச் சந்தித்து உரையாடினார். 

அப்போது ஜிஎஸ்டியால் தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது? ஜிஎஸ்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொழில் அதிபர்கள் நிர்மலா சீதாராமனுடன் பேசினார்கள். அப்போது பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநரும், உரிமையாளருமான சீனிவாசன், ‘’பேக்கரியில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவுகளுக்கும் ஏன் ஒவ்வொரு விதமான ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது? இனிப்பு தின்பண்டங்களுக்கு 5% வரியும், காரத்திற்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால் அதில் இனிப்பு க்ரீம் கலந்தால் 18% ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது.

ஏன் இந்த வேறுபாடு வரி விகிதம். இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் நீங்கள் பன் கொடுங்கள்; நாங்கள் க்ரீம் வைத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆகவே அனைத்து உணவுப்பொருட்களுக்கும் ஒரே விதமான வரி விதிப்பை கொண்டு வாருங்கள்’’ என்று கூறியிருந்தார். சீனிவாசனின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலானது.

’மீனுக்காக காத்திருக்கும் கொக்கை போல’ இதற்காகவே காத்திருந்த திமுகவினர்,   ‘’ஜிஎஸ்டியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வரியால் தொழில் துறையினர் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. தற்போது அதையே அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் வெளிப்படுத்தியுள்ளார்’’ என்று மத்திய அரசையும், நிர்மலா சீதாராமனையும் கடுமையாக தாக்கி பேசினார்கள். 

பின்னர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், ‘’ஹோட்டல் உரிமையாளர் பேசியதில் தவறில்லை. அவர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக, தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தொழில் அதிபர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை’’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தான் பேசியது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. ‘’நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்று  சீனிவாசன் கூறுவதுபோல் வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.  அப்போது நிர்மலா சீதாராமனுடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow