ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - பெண் உட்பட மேலும் 3 பேர் கைது

Armstrong Murder Case : கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார்.

Jul 17, 2024 - 20:38
Jul 18, 2024 - 15:35
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - பெண் உட்பட மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரன் இருவரையும் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் அவருக்கு உதவியதாக ஹரிஹரன் என்பவரையும், திமுக பிரமுகரின் மகன் சதீஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை(Armstrong Murder) செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று ரகசியமான இடங்களிலும் கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பி செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து மீதமுள்ள 10 பேரிடமும் விசாரணை முடிக்கப்பட்டு மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொலையில் முக்கிய நபர்களாக பார்க்கப்படும் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த திருமலை மற்றும் அருள் ஆகிய மூன்று பேரை மேலும் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரஹரன் இருவரையும் கைது செய்தனர். வழக்கறிஞர் மலர்கொடி, பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலர்கொடி அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு மலர்கொடி தொடர்பில் இருந்துள்ளார். திமுக வழக்கறிஞர் அருளின் வங்கி பண பரிவர்தணையை ஆய்வு செய்தபோது வழக்கறிஞர் மலர்கொடிக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளது தெரியவந்ததுள்ளது.

நாட்டு வெடிகுண்டு மலர்கொடி மூலமாக அருளுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவரும் அருளுக்கு உதவி செய்ததாக தெரியவந்ததை அடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி அன்று வழக்கறிஞர் மலர்கொடி எழும்பூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகி விட்டு அண்ணா சாலை வழியாக வந்தபோது, மர்ம கும்ப கும்பல் ஒன்று அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி செய்தது.  அதில் மலர்கொடி காயங்களோடு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 2001ஆம் ஆண்டு, தோட்டம் சேகர் என்பவரை ரவுடி சிவக்குமார் கொலை செய்தார். 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டு தோட்டம் சேகரின் மகன்கள், ரவுடி சிவக்குமாரை மாம்பலத்தில் வைத்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow