CM Stalin Participate Governor RN Ravi Tea Party 2024 : ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருவதாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம், மமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் புன்னகை ததும்ப வரவேற்றனர். பின்பு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நமது சுதந்திர போராட்டத்தை நினைவுகூறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பின்பு தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினும், ஆளுநரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி, தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். இது தவிர எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்பட 800க்கும் மேற்பட்டவர்கள் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதற்கு ஒருபக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்துள்ளது. ''தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது சரியான முடிவு. இது ஆளுநர் பதவிக்கு முதல்வர் அளிக்கும் மரியாதையை காட்டுகிறது. மறுபக்கம் திமுக, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்கிறது'' என்று சிலரும், ''மத்திய அரசு தமிழ்நாடு அரசையும், மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக அரசின் குரலாக இருந்து வருகிறார். ஆகவே தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணித்திருக்க வேண்டும்'' என்று ஒரு தரப்பினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.