சென்னை: கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஐடி நிறுவனத்தில் பணி புரியும் கரூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 26ம் தேதி இந்த ரயிலின் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்துள்ளார்.
இந்த ரயில் நள்ளிரவு 2 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதே ரயிலில் பயணித்த மர்ம நபர் ஒருவர் பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அந்த நபரை துரத்திச் சென்றார். அப்போது அந்த நபர் பெண் ஊழியரை ரயிலின் கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அடுத்த பெட்டிக்கு தப்பிச் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து ரயில் சென்னை வந்ததும், அந்த பெண், எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்பிறகு ரயில்வே போலீசார், மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை தேடி வந்தனர். மர்ம நபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரயில்வே காவல்துறையினர், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குமாரபாளையம் சேர்ந்த கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் கிஷோர், பழைய மகாபல்லிபுரம் சாலையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், சென்னை வருவதற்காக ஈரோடு ரயில் நிலையம் வந்த கிஷோர், தான் செல்ல இருந்த ரயிலை தவற விட்டுள்ளார். இதன்பிறகு முன்பதிவில்லா டிக்கெட் எடுத்த அவர், முன்பதிவு பெட்டியில் ஏறி ஐடி நிறுவன பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. கிஷோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.