வயநாடு கோர நிலச்சரிவு.. மனித தவறா?..பல நூறு உயிர்கள் பறிபோக காரணம் கேரளா அரசின் அலட்சியமா?

Wayanad Landslides in Kerala : கேரளா மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த கொடூர நிலச்சரிவில் சிக்கி பல நூறு உயிர்கள் பறிபோக காரணம் கேரளா மாநில அலட்சியம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Jul 31, 2024 - 15:06
Jul 31, 2024 - 16:39
 0
வயநாடு கோர நிலச்சரிவு.. மனித தவறா?..பல நூறு உயிர்கள் பறிபோக காரணம் கேரளா அரசின் அலட்சியமா?
wayanad landslides madhav gadgil report

Wayanad Landslides in Kerala : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், வயநாடு பேரிடருக்கான காரணம் கேரளா மாநில அரசுதான் என்று குற்றம் சாட்டுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். இயற்கையை பாதுகாக்காமல் அலட்சியப்படுத்தியதால் நிகழ்ந்த செயற்கை பேரிடர்தான் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சூழலியல் ஆர்வலர்கள். 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தின் இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.பெருமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், நிலச்சரிவுகள், உயிரிழப்புகள் என இத்தகைய சூழ்நிலையை கேரள மாநிலம் சந்திப்பது இது முதல்முறையல்ல.

கடந்த  2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு வயநாடு, இடுக்கி, கண்ணூர், திரிச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 483 பேர் உயிரிழந்தனர். ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டது.1924ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இது என்று விவரிக்கப்பட்டது.“நூற்றாண்டுக்குப் பிந்தைய மோசமான வெள்ளம்” என்று அப்போது கூறினார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.

இதனையடுத்து கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் வயநாடு, மலப்புரம், கண்ணூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இரண்டே நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 121 பேர் உயிரிழந்தனர்.மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கண்டறிய சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் தலைமையில் 13 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை 2010ஆம் ஆண்டு அமைத்தது மத்திய அரசு.அந்த ஆய்வுக்குழு, 2011ஆம் ஆண்டு இந்திய அரசிடம் 522 பக்கங்களுக்கு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் எங்கெல்லாம் என்னென்ன சூழலியல் பிரச்னைகள் இருக்கின்றன, அவை அதன் சுற்றுச்சூழல் சமநிலையை, மக்களின் வாழ்வியலை எப்படிப் பாதிக்கின்றன என்று முழுமையாக ஆராய்ந்து, அதைச் சரிசெய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அறிவுறுத்தியது.ஆனால் அந்த அறிக்கையை இந்திய அரசாங்கமும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாநிலங்களின் அரசுகளும் நிராகரித்தன.

மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு , கடந்த 2011 ஆம் ஆண்டு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், 
மேற்கு மலைத்தொடர் முழுவதையுமே மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. சூழலியல் மண்டலம் 1-ல் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 2-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் மண்டலம் 3-ல் முக்கியமான சூழலியல் பகுதிகள். 

இதில், முதல் இரண்டு சூழலியல் மண்டலங்களில் மொத்த மலைத்தொடரின் 75 சதவிகித பகுதி வருகிறது. மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடியைக் கைவிடவேண்டும்.காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்கவேண்டும்.
காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்புதல், நதிகளின் போக்கை திசைதிருப்புதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.

அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்கவே கூடாது.கேரளாவில் பாயும் சாலக்குடி நதியில் மாநில மின் வாரியம் திட்டமிட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும்.மலைத்தொடரின் பாதுகாப்பு கருதி, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும். அந்த ஆணையம் மலைத்தொடரில் வாழும் மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகள், பங்கெடுப்புகளோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

பழங்குடி மக்களை காட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர்த்து, காடுகள் பாதுகாப்பில் அவர்களுடைய பங்கெடுப்பை உறுதி செய்து அதற்கு ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும். இந்திய வன உரிமைச் சட்டத்தை மேற்கு மலைத்தொடர் முழுக்க முறையாக அமல்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதவ் காட்கில் தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் அறிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிராகரித்ததில் அவரும் அவரது சகாக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர் . மேற்குத் தொடர்ச்சி மலையின் 140,000 சதுர கிமீ பரப்பளவை 'சுற்றுச்சூழல் உணர்திறன்' என வகைப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த ஆண்டு 56,824 சதுர கி.மீ.க்கு மட்டுமே மையம் அறிவித்தது. இந்த அறிக்கையை முழுவதுமாக அமல்படுத்துவதற்கு கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மாதவ் காட்கில் கூறியுள்ளார்.

சுற்றுலா தலமாக மாறியுள்ள வயநாடு மலைப் பகுதிகளில் சுற்றுலா விடுதிகள், பவர் ஹவுஸ், அணைகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கட்டியுள்ளனர். குவாரிகளை அமைத்து மலைகளை உடைப்பதால் மேற்குத்தொடர்ச்சி மலையின் கற்களும் மண்ணும் இளகிக் கொண்டே இருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும் ஏற்படுகின்றன என்கின்றனர் புவியியல் நிபுணர்கள்.

ஒருவேளை மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி இருந்தால் இன்று இவ்வளவு பேரழிவையும் தடுத்திருக்கலாம். விலை மதிப்பற்ற மனித உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாமே என்பதே மறுக்க முடியாத உண்மை.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பலநூறு உயிர்கள் பறிபோக காரணம் இயற்கை பேரிடர் மட்டுமல்ல கேரள மாநில அரசின் அலட்சியத்தால் செயற்கையாக நிகழ்ந்த பேரிடர் என்கின்றனர் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். இது மனித தவறுதான் என்று கூறியுள்ளார் மாதவ் காட்கில். மாறிவரும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப அதீத மழைப்பொழிவும் அதிகரிப்பதால் தங்கள் குழுவினரின் பரிந்துரையை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும் என்றும் மாதவ் காட்கில் கூறியுள்ளார். தமிழக அரசு இதிலிருந்து பாடம் காற்றுக்கொள்ளுமா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow