Pradeep John on Landslide in Tamil Nadu : 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் இப்போது கண்ணீர் கடலில் முழ்கியுள்ளது. வயநாடு மாவட்டத்தில் விடாமல் கொட்டித்தீர்த்த பேய்மழையால் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள், குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள் என அனைத்தும் மண்ணில் புதைந்தது.
நிலச்சரிவில் சிக்கியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 150க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புவி வெப்பமயமாதலே கேரள நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழைப்பொழிவுதான் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''கேரளாவில் கடந்த 10 முதல் 12 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதீத கனமழை பெய்து வருகிறது.
நேற்று மட்டும் வயநாட்டில் 300 செ.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக ஏற்கெனவே நிலம் ஈரப்பதமாக இருந்த நிலையில், கூடுதல் மழை காரணமாக நிலம் மிகவும் இலகுவாக மாறி ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. கனமழை ஏற்படுவதை நாம் முன்கூட்டியே கணிக்க முடியும். ஆனால் நிலச்சரிவு ஏற்படுவதை நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது.
ஆனால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும். 2020ம் ஆண்டு இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை வைத்து நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொள்ளாதவாறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019ம் ஆண்டு இதே வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதை வைத்து எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, தேவாலா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் வால்பாறை, குன்னுர், கேத்தி, கொடைக்கானலின் சில பகுதிகளில், தென் தமிழகத்தில் மாஞ்சோலை ஆகிய இடங்களில் அதிக கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வயநாடு நிலச்சரிவை விளக்கிய சென்னை பல்கலைக்கழக நிலவியல் துறை தலைவர், ''வயநாட்டில் மலைச்சரிவுகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டியதே நிலச்சரிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விட்டது. வெள்ளநீர் பாய்ந்தோடும் வழித்தடங்களில் கட்டுமானங்கள் கட்டியதால், அதன் போக்கு மாறி பேரழிவை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் கட்டுமானங்கள் கட்ட அரசு கடுமையான தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.