குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ்..வில்லன்கள் பாடம் நடத்துவதா? விட்டு விளாசிய மோடி

அரசியலமைப்பை பாதுகாப்போம் எனக்கூற காங்கிரசுக்கு தகுதியில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரசியலமைப்பு என்பது குடும்ப அரசியல் குறித்தது என்று கூறியுள்ள மோடி,அவசர நிலையை அமல்படுத்திய வில்லன்கள் தற்போது பாடம் எடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Jul 3, 2024 - 14:53
Jul 3, 2024 - 15:40
 0
குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ்..வில்லன்கள் பாடம் நடத்துவதா? விட்டு விளாசிய மோடி
PM Modi speech in Rajya Sabha Today

குடியரசுத்தலைவர் உரைக்கு நேற்று நன்றி தெரிவித்து மக்களவையில் பேசிய மோடி, இந்தியா கூட்டணி கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்தார். மோடியை பேச விடாமல் மணிப்பூர் மணிப்பூர் என்று எதிர்கட்சி எம்பிக்கள் கூக்குரல் எழுப்பிய நிலையிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக தான் பேச வேண்டிய விசயங்களை பேசி விட்டுதான் அமர்ந்தார் மோடி. ராகுல் காந்தி தொடங்கி தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் வரை அனைவரையும் விமர்சித்தார் மோடி. 

இன்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மோடி நாட்டின் வளர்ச்சியில் அடுத்த 5 ஆண்டு காலம் கவனம் செலுத்தப்போவதாக கூறினார்.10 ஆண்டுகால ஆட்சி வெறும் Side Dish தான் இனிதான் விருந்தே ஆரம்பிக்கப் போகிறது என்று கூறிய மோடி எதிர்கட்சியினரை வறுத்தெடுத்தார். பாலியல் குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோரை தேர்ந்தெடுத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன.மேற்குவங்கத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது கவனத்துக்கு வந்துள்ளது.

மேற்குவங்க பாலியல் வன்கொடுமை குறித்து எதிர்கட்சிகள் வாய்திறக்காதது ஏன்?. நாங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம், வாக்கு வங்கி அரசியலில் அல்ல. அரசியலமைப்பை பாதுகாப்போம் எனக்கூற காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை. காங்கரஸ் கட்சியை பொறுத்தவரை அரசியலமைப்பு என்பது குடும்ப அரசியல் குறித்தது.

இந்தியாவே இந்திரா தான் எனக் கூறியவர்கள் எப்படி அரசியலமைப்பை பாதுகாக்க முடியும்.எதிர்கட்சிகள் எதைக் கொண்டாடுகிறார்கள் எனத் தெரியவில்லை
தேசத்தை திசைதிருப்புவது காங்கிரசின் வழக்கம். அவசரநிலையை அமல்படுத்திய வில்லன்கள் தற்போது பாடம் எடுக்கின்றனர் என்றார். 

தொடர்ந்து பேசிய மோடி,நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவர் என உறுதியளிக்கிறேன்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு உறுதியளிக்கிறேன். வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்குகின்றன. இளைஞர்களின் எதிர்காலத்தில் எதிர்கட்சியினர் விளையாடுகின்றனர்.மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் அமைதியை நிலைநிறுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல மணி நேரம் செலவழித்துள்ளார்.மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. மணிப்பூரில் வன்முறை குறைந்துள்ளது.மணிப்பூரில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சியின்போது மணிப்பூரில் 10 முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.காங்கிரசின் 5 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.மணிப்பூரில் பற்றி எரியும் தீயில், காங்கிரஸ் எரிபொருள் ஊற்றி வருகிறது என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow