Sitaram Yechury : சேகுவாராவின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்... சீதாராம் யெச்சூரி பயோ!

Veteran CPM Leader Sitaram Yechury Biography in Tamil : ‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே’ என்ற சேகுவாராவின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சீதாராம் யெச்சூரி, இன்று தன் போராட்ட பயணத்தை முடித்துக் கொண்டார். அவரது அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

Sep 12, 2024 - 22:29
Sep 12, 2024 - 23:01
 0
Sitaram Yechury : சேகுவாராவின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்... சீதாராம் யெச்சூரி பயோ!
சீதாராம் யெச்சூரி பயோ

Veteran CPM Leader Sitaram Yechury Biography in Tamil : காம்ரேட் சீதாராம் யெச்சூரி! 1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து, ஹைதரபாத்தில் வளர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஜே.என்.யூவில் பிஎச்டி படிப்பிற்காக சென்றபோது, 1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைந்துக்கொண்டார். தொடர்ந்து, மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை தேர்வான அவர், 1975 ஆம் ஆண்டு எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், பிரகாஷ் காரத்துடன் இணைந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இடதுசாரி கோட்டையாக மாற்ற காரணமாக அமைந்தார். 

1978 இல், SFI-இன் அகில இந்திய இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யெச்சூரி, SFI இன் அகில இந்தியத் தலைவராக உயர்ந்தார். கேரளா அல்லது வங்காளத்தை தாண்டி பிற மாநிலத்தில் இருந்து வந்து SFI இன் முதல் தலைவரானவர் யெச்சூரி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டு சிபிஎம் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முழுநேர அமைப்பாளராக மாறுவதற்கு மிகக் குறைவான நேரமே எடுத்தது. களத்தில் அத்தனை வேகம், குரலில் அத்தனை பவர், கருத்தில் அத்தனை தெளிவு என 1978 முதல் 1998 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அதிகார வர்க்கத்தின் குலை நடுங்க வைத்த தோழர்கள் கூட்டம் இருந்ததோ, அங்கெல்லாம் அதனை வழிநடத்தும் தலைவனாக யெச்சூரி இருந்தார். இது கட்சியிலும் பிரதிபலித்தது. 

1996 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்தது. இதற்கு மிகப்பெரும் காரணியாக இருந்த யெச்சூரியுடன் இணைந்து பா.சிதரம்பரமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் பொதுவான குறைந்தபட்ச திட்டங்களை உருவாக்கினார். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையின் போது, சிபிஎம் உடன்படிக்கைக்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் யெச்சூரி ராஜ்யசபாவில் பட்டியலிட்டார். மன்மோகன் சிங் அரசாங்கம் அதனை எற்றுக்கொண்டாலும், CPM இன் "சுதந்திர வெளியுறவுக் கொள்கை" என்ற கருத்தை மீறுவதாகக் கூறி பிரகாஷ் காரத் அதை நிராகரித்தார். 

தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே மதச்சார்பற்ற ஜனநாயக மக்கள் சார்பான அரசை அமைப்பதில் முக்கிய பங்காற்றி வந்தார். எப்போதும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியதோடு, "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதில் நம்பிக்கை கொண்டவராகவும், வன்முறைக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பியும் வந்தார். 2005-ல் மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட யெச்சூரி, பல முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 

நாடாளுமன்றத்தில் அடிக்கடி இடையூறுகள் ஏற்படுத்துவதாக ஆளும் கட்சியால் அவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஆனால், அவரோ அடிக்கடி இடையூறுகள் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகளைக் குறை கூறுவதன் மூலம் அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து தப்ப முடியாது... நடாளுமன்றத்தில் இடையூறுகள் நியாயமானவை என்பதோடு, அது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை சுட்டிக்காட்டினார். மார்க்ஸிய சித்தாந்ததை தன் வாழ்க்கையின் அறமாக கொண்டிருந்த யெச்சூரி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். 2015 குடியரசு தின அணிவகுப்பின் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வருகையை அவர் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சிக்கு அமெரிக்காவைக் குற்றம்சாட்டிய அவர், மேற்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தலையீடுகள் முழுமையான நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இராணுவத் தலையீடுகள் எப்போதுமே அடிப்படைவாதத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது. சமூகத்திற்காக தன் கடைசி மூச்சுவரை குரல் கொடுத்துக் கொண்டே இருந்த ஓர் உன்னதமான போராளி சீதாராம் யெச்சூரி. 72 வயதான அவருக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தீவிர காய்ச்சல், சுவாச பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 

மேலும் படிக்க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

போராட்டம் ரத்தத்திலேயே கலந்திருந்ததால், எத்தனையோ போராட்டத்தை சந்தித்து அதில் வெற்றிப் பெற்றிருந்தாலும், மரணத்துடனான போராட்டத்தில் தோல்வியை தழுவிவிட்டார் தோழர் யெச்சூரி. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் காம்ரேட் என்றே அழைக்கும் அவர், தன்னை போன்று லட்சக்கணக்கான காம்ரேடுகளையும் உருவாக்கிவிட்டுத்தான் இம்மண்ணுலகைவிட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow