TVK Vijay: மந்த நிலையில் தவெக மாநாடு ஏற்பாடுகள்... நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sep 12, 2024 - 16:26
 0
TVK Vijay: மந்த நிலையில் தவெக மாநாடு ஏற்பாடுகள்... நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கிய விஜய்!
தவெக மாநாடு ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் 23ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி தவெக மாநாடு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அதன் கொடியை சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தினார். 

இதனையடுத்து தவெக முதல் மாநாடு நடத்துவதில் தீவிரமாக உள்ளார் விஜய். அதன்படி தவெக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் சுமார் 85 ஏக்கர் இடத்தில் தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்கான அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு வழங்கியிருந்தார். 

இதனையடுத்து மாநாடு நடைபெறும் இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், தவெக மாநாடு குறித்து காவல்துறை சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்பின்னர் 33 நிபந்தனைகளுடன் தவெக மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், பார்க்கிங் பிரச்சினை காரணமாக தற்போது தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது மாநாடு நடைபெறும் திடல் ஒருபுறமும், அதில் பங்கேற்க வருபவர்கள் கார்களை நிறுத்த ஏற்பாடு செய்துள்ள இடம் இன்னொரு புறமும் உள்ளன.

மேலும் படிக்க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

இந்த இரண்டுக்கும் நடுவே தான் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் கார்களை பார்க்கிங் செய்துவிட்டு மாநாட்டு திடலுக்குச் செல்லும் தவெக தொண்டர்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

இதன் காரணமாக தவெக மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடைபெறுமா என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த குளறுபடிகளால் கடுப்பான தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை கடுமையாக திட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. போலீஸார் அனுமதி ஒருபக்கம் இருந்தாலும், மாநாடு நடைபெறும் இடம் இன்னும் முழுமையாக ரெடியாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் விஜய்யை ரொம்பவே டென்ஷனாக்கியுள்ளதாம். எனவே வேறு வழியில்லாமல் தவெக மாநாட்டை அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தேதியை மாற்றி விழுப்புரம் போலீசாரிடம் முறைப்படி அனுமதி கேட்டு தவெக சார்பில் கடிதம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow