அரசியல்

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!
Annamalai And MK Stalin

ஈரோடு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் பின்தங்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி (GST) 11% குறைந்துள்ளது. ஆகவே திமுக அரசு இங்கு தொழில் வளத்தை பெருக்க ஊக்குவிக்க வேண்டும். தொழில் துவங்க வரும் பெரிய நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். 

ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சியை பெருக்குவதில் கவனம் செலுத்தாமல், வேறு எங்கோ செலுத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை திருப்பூரில் இருந்து தொடங்க உள்ளோம். வலிமையான தமிழகத்தை உருவாக்குவதுதான் பாஜகவின் இலக்கு.  2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நடைபெறும். போட்டிகள் அதிகரித்தால் மட்டுமே நல்லவர்கள் வெற்றி பெற முடியும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. 2026ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்'' என்றார்.

அப்போது அண்ணாமலையிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், ''நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.  2026 தேர்தலில் மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிப்பார்கள்'' என்று கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், ''தமிழ்நாட்டில் பட்டியலின சமுதாய மக்களின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டதற்கும் ஜாதியை ஊக்குவிப்பதற்கும் காரணம் திராவிட மாடல் அரசுதான். இதனை உடைக்கும் விதமாகதான் கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாட்டில் தேசிய ஜனநாய கூட்டணி உறுதியாக உள்ளது.  அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் திறப்பு விழா தேதி தொடரந்து தள்ளி போவதால்தான் பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்த திட்டம் துவங்கும் தேதியை அமைச்சர் முத்துசாமி  உறுதியாக அறிவித்தால் போராட்டத்தை கைவிடுவது குறித்து பாஜக பரிசீலனை செய்யும். அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பேராசியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலினிடம், ''உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறதே'' என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''இது தொடர்பான கோரிக்கை வலுத்திருக்கிறது. அது பழுக்கவில்லை'' என்று கூறி இருந்தார். இதை வைத்து இப்போது அண்ணாமலை பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.