ஆட்கொல்லி நகரமாக மாறிவரும் டெல்லி.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வரலாற்று ஆசிரியர்
தான் வாழ்ந்த 40 வருடங்களில் டெல்லியை இதுபோல் பார்த்ததில்லை என்று ஸ்காட்டிஸ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பில்ஸ் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் மூச்சு திணறல், சுவாசக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்குமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் வீட்டின் வெளியிலிருந்து உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துவிட்டு வீட்டினுள் இருந்து உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கதவு, ஜன்னல் ஆகியவற்றை மூடிய படி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்றுமாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், புற்றுநோயை உண்டாக்கும் மாசுகள் காற்றில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவான 980 எட்டியுள்ளதாகவும் இது சாதாரண அளவை காட்டிலும் 65 சதவீதம் அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நொய்டா, குருகிராம், காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 500 அளவை எட்டியுள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலையாக கருதப்படுகிறது.
காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உலகின் சிறப்புமிக்க நகரமாக திகழ்ந்த டெல்லி காற்று மாசுபாடு காரணமாக ஆட்கொள்ளி நகரமாக மாறி வருவதாக ஸ்காட்டிஸ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பில்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காற்றுமாசுபாடு குறித்து அறிவதற்காக டெல்லி வந்ததாகவும் தான் வாழ்ந்த 40 வருடங்களில் டெல்லியை இதுபோல் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிலளித்துள்ள நெட்டிசன் ஒருவர், காற்றும் மாசுபாடு காரணமாக என் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?