'நீட்' தேர்வு முறைகேடு வழக்குகள்... ஜுலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஜுலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மிகவும் கடினமான இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
மாணவர்களின் உயிருடன் விளையாடும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு இதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து நீட் தேர்வை நட்த்தி வருகிறது.
இதற்கிடையே கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை நீட் தேர்வு நடந்த்து. இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்த்தாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதாவது முன் எப்போதும் இல்லாத வகையில், 77 மாணவர்கள் முதலிடம் பெற்றதும், ஒரே தேர்வு மையங்களை சேர்ந்த பலர் முதலிடம் பிடித்ததும் சந்தேகத்தை அதிகரித்தது.
இதனால் நீட் தேர்வு எழுதியவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘’ நீட் தேர்வு முறைகேடு நடந்துள்ளதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,564 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளது. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’என கூறப்பட்டு இருந்தது.
ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், ’’கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும். மறுதேர்வை எழுதாதவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
இதன்பிறகு நீட் தேர்வு முறைகேடுகளை ஒப்புக்கொண்ட மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதன்பேரில் குஜாரத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணையை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் முறைகேடு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இதன்பிறகு நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடித்த்து. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற்ப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும் நாடாளுமன்றத்திலும் நீட் விவகார எதிரொலித்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மக்களவை, மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சியினர் வலியுறூத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஜுலை 8ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?