மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு... தமிழகத்தில் எங்கெல்லாம் மழை… மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை..?
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை: மே, ஜூன் மாதங்களில் கோடையை தணிக்கும் விதமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. ஆனால் ஜூலை மாதம் ஆரம்பம் ஆனது முதலே மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. புதுவையிலும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், அவலாஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளிலும், கோவை அருகே சிறுவாணி அடிவாரம், கிணத்துக்கடவு, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 38.8 டிகிரி செல்சியஸும். குறைந்தபட்சமாக நாமக்கலில் 20.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. அடுத்த 7 நாட்களில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாளை முதல் 7ம் தேதி வரை அந்த பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
தெற்கு, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?