ஆடிப்பெருக்கு..நீரோடும் காவிரியில் ஆடி 18.. எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபட்டால் என்ன நன்மை?

Cauvery River Worship on Aadi 18 Perukku : ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோரங்களில் ஆண்டுடோறும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படும். நடப்பாண்டு காவிரி ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

Jul 31, 2024 - 14:34
Jul 31, 2024 - 14:49
 0
ஆடிப்பெருக்கு..நீரோடும் காவிரியில் ஆடி 18.. எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபட்டால் என்ன நன்மை?
Cauvery River Worship on Aadi 18 Perukku Festival

Cauvery River Worship on Aadi 18 Perukku : காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடி வருவதால் ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் செல்வ வளம் பெருகவும் ஆடிப்பெருக்கு விழா நீர் நிலைகளில் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.

ஆடி பதினெட்டு அன்றுதான் சூரிய பகவான் கடக ராசியில் பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார். பூச நட்சத்திரம் சனி பகவானின் நட்சத்திரம். அதன் அதிபதி பிரகஸ்பதி என்றழைக்கப்படும் தேவகுரு. சூரிய பகவான் தேவகுருவின் பார்வையில் இருக்கும்போது கட்டுப்பட்டே இருப்பார். அவர் தேவகுருவின் பார்வையிலிருந்து விடுபட்டு தன் நட்புக்கிரகமாகிய புதனின் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்துக்குச் செல்லும் நாள் ஆடி பதினெட்டு. 'சூரியனும் புதனும் நட்புக் கிரகமாகையால் அன்றைய தினம் தொடங்கும் செயல்கள் எல்லாம் பல மடங்கு பெருகும்' என்பது ஐதிகம். எனவேதான் இந்த நாளில் தொடங்கும் அனைத்தும் பல மடங்கு பெருகி செழிப்பை வழங்கும் என்பது நம்பிக்கை.

ஆடிப் பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் இருக்கக் கூடிய வெயில் காலம் முடிந்து ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யத்துவங்கும். விளை நிலங்கள் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் ஆறுகளில் பெருகி வரும் இந்த புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுவதுதான் ஆடிப்பெருக்கு. 

சங்க நூல்களில் ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு சிறப்பானது. ஆடி 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதியர் என அனைவரும் தங்கள் குடும்பத்தோடு காவிரி ஆற்றின் படித்துறையில் படையலிட்டுத் தீபம் ஏற்றி, காவிரி அன்னையை வழிபடுவார்கள்.

ஆற்றில் புது பெருக்கெடுத்து ஓடி வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது, நல்ல மணமகன் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.எப்போதும் இதேபோல தாயான காவிரியும் உன் குழந்தைகளான நாங்களும் மகிழ்ச்சி கரைபுரள வாழ வேண்டும் என நன்றி கூறி வணங்குவார்கள். 

கர்நாடக மாநிலம் குடகு மலையில் பிறந்து தலைக்காவிரியாக உற்பத்தியாகி, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியே பயணித்து, பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி. இந்த ஆண்டு காவிரி ஆற்றில் புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள். 

ஆடிப்பெருக்கு பண்டிகை வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாட உள்ளதால் மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்பில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை சென்றடைந்து கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் தொடங்கி பூம்புகார் வரைக்குமே ஆடி பதினெட்டாம் பெருக்கு பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும். நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. 

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படையல் போட்டு வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

ஆடிப்பெருக்கு நாளில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசிகளில் பிறந்தவர்களும் சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசிக்காரர்களும் நீர் நிலைகளுக்கு சென்று வழிபாடு செய்தால் அபரிமிதமான பலன்களைப் பெறலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow