Monkey Pox Vaccine : குரங்கம்மை தடுப்பூசி.. குட் நியூஸ் சொன்ன சீரம் இந்தியா சிஇஒ அதார் பூனாவல்லா

Serum Institute of India Producing Monkey Pox Vaccine : ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா கூறியுள்ளார்.

Aug 21, 2024 - 11:36
Aug 21, 2024 - 18:25
 0
Monkey Pox Vaccine : குரங்கம்மை தடுப்பூசி.. குட் நியூஸ் சொன்ன சீரம் இந்தியா சிஇஒ அதார் பூனாவல்லா
monkey pox vaccine adar poonawalla

Serum Institute of India Producing Monkey Pox Vaccine : குரங்கம்மை தொற்றுக்கு சீரம் இந்தியா நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கிறது. குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா கூறியுள்ளார். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. 

குரங்கம்மை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய். இந்நோய் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும். ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆய்வகக் குரங்கிலிருந்து முதன் முதலில் இந்த வைரஸ் எடுக்கப்பட்டதால் இதற்கு குரங்கம்மை எனப் பெயர் பெற்றது. குரங்கு மற்றும் பெரியம்மை வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை. இந்த குரங்கு அம்மை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது. காய்ச்சல், சளி, தசை வலி, தலைவலி, முதுகுவலி, சோர்வு போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகளாகும்.  முதலில் அரிப்புகள் ஏற்பட்டு கொப்புளங்களாக மாற்றி பின்னர் வடுக்களாக மாறும். 

காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு பகுதிகளில் வீக்கம், உடல் சோர்வு ஏற்படுதல். சருமத்தில் சிறு கொப்பளங்கள் முகத்தில் தொடங்கி கை கால் உள்ளங்கை, உள்ளங்கால் வரை பரவக்கூடியது. தொண்டைப்புண், இருமல், தசை பிடிப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
கண் வலி, பார்வை மங்குதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். 
இந்நோய் மனிதர்களிடம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. WHOவின் கூற்றுப்படி கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள் போன்றவர்களுக்கு இந்நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ​​நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா; ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2019 இறுதியில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய போது இந்தத் தொற்றுக்கான, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை, சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தில் யாருக்கேனும் குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.நோய்வாய்ப்பட்டவர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.அவர்கள் பயன்படுத்தும் படுக்கை உட்பட எந்தப் பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும். தொற்று பாதிப்பு உள்ளவர்களைத் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி நன்கு கழுவவும்.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள் மூலமும் இந்நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க நோயாளிகள் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய முகக் கவசம் பயன்படுத்த வேண்டும். உடல் ரீதியான நேரடித் தொடர்பு உடையவர்களிடமிருந்து இந்நோய் பரவும். எனவே, நோய் அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow