தவெக கொடியை கிண்டலடித்த மேடை பேச்சாளர்.. வச்சி செய்த விஜய் ரசிகர்கள்!
''ஏதோ ஒரு வகையில் புகழ்பெற்ற ஒருவர் அரசியலில் நுழையும் போதெல்லாம் அதை காமெடியாக்கும் விஷமப் பிரச்சார இயக்கம் சமூகத்திற்கே ஜனநாயக பேரிழிவும் அபாயமும் ஆகும்'' என்று விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்த அவர் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என்றும் தவெக சார்பில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்தார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அதனைத் தொடர்ந்து அலுவலகத்திலும் கொடியை பறக்கவிட்டார். கட்சியின் பாடலையும் வெளியீடு செய்தார். இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, அம்மா ஷோபா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக கட்சியின் உறுதிமொழியை விஜய் வாசிக்க, தவெக கழக நிர்வாகிகளும் அதை உறுதிமொழி ஏற்றனர். தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்றும் இந்த கொடியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வகை மலைரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. தவெக கொடியில் உள்ள குறியீடுகள் குறித்து விஜய் ஏதும் தெரிவிக்கவில்லை. விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்த சில மணி நிமிடங்களில் கொடியின் அமைப்பு, அதன் நிறங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலானது.
சிலர் தவெக கொடி கேரள போக்குவரத்து கழகத்தின் லோகோ போன்று இருப்பதாகவும், Fevicol Logo போன்று இருப்பதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியை அப்படியே காப்பி செய்துள்ளதாகவும் சமுகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தனர். இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மேடை பேச்சாளரும், திமுக ஆதரவாளரர் என கருதப்படுபவருமான மதிமாறன் என்பவர், தவெக கொடியை விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''தனது அடுத்தப் படமான 'யானைப்பாகன் Part 2' first look போஸ்டர் வெளியிட்டின் போது'' என்று கிண்டல் செய்தார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் மதிமாறனுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்து வருகின்றனர்.
''தமிழ்நாட்டில் யார் கட்சி தொடங்கினாலும் திமுகவிற்கும், உடன்பிறப்புகளுக்கும் பதற்றம் ஏற்படுகிறது'' என்று ஒரு சிலர் கூறி மதிமாறனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''ஏதோ ஒரு வகையில் புகழ்பெற்ற ஒருவர் அரசியலில் நுழையும் போதெல்லாம் அதை காமெடியாக்கும் விஷமப் பிரச்சார இயக்கம் சமூகத்திற்கே ஜனநாயக பேரிழிவும் அபாயமும் ஆகும்'' என்று சில விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
''நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றால், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யார்? அவருக்கும் மதிமாறன் கண்டனம் தெரிவிப்பாரா?'' என்று கூறி விஜய் ரசிகர்கள் மதிமாறனை வச்சி செய்து வருகின்றனர்.
What's Your Reaction?