TVK Flag Issue : கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அதன் கொடியையும் கடந்த மாதம் 22ம் தேதி அறிமுகம் செய்தார். அதேநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலையும் விஜய் வெளியிட்டிருந்தார். தவெக கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் அமைந்துள்ளது. கொடியின் நடுவில் உள்ள சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த நட்சத்திரங்கள் நீலம், பச்சை வண்ணத்தில் உள்ளன, மேலும் அதனை இரண்டு ஆண் யானைகள் வணங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தவெக கொடியை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது. சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது என, அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமாக யானை உள்ளதாகவும், இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, இதை மற்றக் கட்சிகள் பயன்படுத்த முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன் கூறியிருந்தார்.
அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கொண்டுவந்த திருத்தத்தில், அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, அங்கீகரிக்கப்படாத கட்சிகளோ யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளதாகவும் ஆனந்தன் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்த விவகாரத்தில் த.வெ.க நிர்வாகிகள் உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் ஆனந்தன் தெரிவித்திருந்தார். அதேநேரம் தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள், வாகை மலர், சிவப்பு, மஞ்சள் வண்ணம் ஆகியவை குறித்து முதல் மாநாட்டில் விஜய் விளக்கம் கொடுக்கவுள்ளார்.
இந்நிலையில், தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும் அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது தேர்தல் ஆணையம் இல்லை. சின்னங்கள், பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம் 1950க்கு உட்பட்ட வகையில் இருப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்தக் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தலில் தவெக கொடியை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என சொல்லப்படுகிறது.
இதனால் நிம்மதியான தவெக தலைவர் விஜய், முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தவெக முதல் மாநில மாநாடு செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அக்டோபர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 27ம் தேதியும் உறுதியாகவில்லை என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது தவெக மாநாடு நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனுடன் தவெக கொடி பஞ்சாயத்தும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.