‘கருத்தியலின் அடையாளம் சீதாராம் யெச்சூரி’..முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
''கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 12ம் தேதி டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினார்கள்.
இந்நிலையில், சென்னை காமராஜர் அரங்கில் சீதாராம் யெச்சூரியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோதே அவரது உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன். எப்படியாது உடல்நலம் தேறி திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அவர் மறைந்தவுடன் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார். தோழர் சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, எங்களுக்கும், எல்லோருக்கும் சொந்தமானவர். இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் யெச்சூரி. இந்தியா கூட்டணி இந்த அளவுக்கு வெற்றி பெற முக்கிய காரணமாக அவர் விளங்கினார்.
இந்தியாவின் கருத்தியலின் அடையாளமாக திகழந்த யெச்சூரி, ஜே.என்.யூ முழுவதுமாக மார்க்சிஸ்ட் கோட்டையாக மாற்றிய பெருமைக்குரியவர். சிறந்த எழுத்தாளரான யெச்சூரி, இடதுசாரி கருத்துகளை இறுதிமூச்சுவரை கடைபிடித்தார். சமதர்மம், சகோதரத்துவம், சமூகநீதி கொண்ட மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க அவரது பாதையில் பயணிப்போம்’’ என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?






