‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Sep 23, 2024 - 18:40
 0
‘வாழ்விழந்த மீனவர்கள்..  40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
Edappadi Palaniswami

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் மீது தாக்குதல் நடத்தி வருவதும் வழக்கமாகி விட்டது.  அதுவும் கடந்த சில மாதங்களாக நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மிக அதிகமாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்துக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், இதற்கு ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்புவதும் வாரத்துக்கு ஒருமுறை நடந்து வருகிறது. 

ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டக்கோரி மீனவர்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்,  மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ‘’பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று , மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார். 

ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார்பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்றீர்கள். நடுக்கடலில் எழுதாத பேனா சிலை வைக்க மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்? 

தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்.  

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பிக்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow