TVK Maanadu: 100 அடி உயர கொடிக் கம்பம்... மழையே வந்தாலும் தவெக மாநாடு நடக்கும்... தரமான ஏற்பாடு!

புயல் மழையே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி கண்டிப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Oct 12, 2024 - 22:11
 0
TVK Maanadu: 100 அடி உயர கொடிக் கம்பம்... மழையே வந்தாலும் தவெக மாநாடு நடக்கும்... தரமான ஏற்பாடு!
தவெக மாநாட்டு திடலில் 100 அடி உயரக் கொடி கம்பம்

விழுப்புரம்: அரசியல் வட்டாரம் மட்டுமின்றி, தமிழக மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தவெக முதல் மாநில மாநாடு. கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், இனிமேல் அரசியல் தான் என முடிவெடுத்துவிட்டார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதனிடையே விஜய்யின் அரசியல் கொள்கை என்ன?, அவரது சித்தாந்தம் என்ன? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இதற்கெல்லாம் விடை தெரியும் நாளாக அக்டோபர் 27ம் தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

அதாவது அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெக முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தனது கட்சியின் கொள்கை, சித்தாந்தம் முதல், கொடியில் இருக்கும் வண்ணங்கள், வாகை மலர் பற்றியும் விளக்கம் கொடுக்கவுள்ளார் விஜய். இந்நிலையில், தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மாவட்ட காவல்துறை சார்பிலும் மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தற்போது மேடையமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விக்கிரவாண்டி வி.சாலையில் தவெக மாநாடு நடைபெறும் இடம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அங்கு நிரந்தரமாக ஒரு கொடிக் கம்பம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதன்படி இந்தக் கொடிக் கம்பம் 100 அடி உயரத்தில் இருக்கும் என்றும், மாநாடு நடைபெறும் தினத்தில் விஜய் முதலில் இதனை ஏற்றிய பின்னரே மேடையேற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அமைத்துக் கொடுத்துள்ள பிரபல நிறுவனம் தான், தவெக கொடிக் கம்பத்துக்கான வேலைகளையும் செய்து வருகிறதாம்.

மேலும், இந்த கொடிக் கம்பம் புயல், மழையை தாங்கும் வகையில், வின்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்காக 8 அடி ஆழத்தில் அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கொடிக் கம்பம் அமைப்பதற்கான பூமி பூஜை தற்போது நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவும் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூஜை போடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநாடு நடைபெறும் தினத்தில், மழையே வந்தாலும் நிகழ்ச்சி தடைபடக் கூடாது என்பதில் தவெக தலைவர் விஜய் உறுதியாகவுள்ளாராம். இதற்காகவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow