TVK Vijay: ”மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது..” தவெக தோழர்களுக்கு பறந்த 8 கட்டளைகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் கொடியையும் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தார். அதேநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலையும் அவர் வெளியிட்டு அதிரடி காட்டினார். முன்னதாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கிய விஜய், அவ்வப்போது அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு வந்தார். அவரது இந்த அறிக்கை அரசியல் விமர்சனத்துக்குள்ளான நிலையில், கடந்த வாரம் மறைந்த தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது திருவுருவ சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்மூலம் விஜய்யின் அரசியல் கொள்கையும் சித்தாந்தமும், திராவிடக் கட்சிகளைப் போல, பெரியாரின் வழியில் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் திட்டமிட்டப்படி இன்று (செப்.23) நடந்திருக்க வேண்டிய தவெக மாநாடு, இப்போது அக்டோபர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக மாநாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய்யும் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக தவெக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதியும் பாதுகாப்பும் கேட்டு புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்துகொள்ளும் கட்சி தொண்டர்களுக்கு, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார். அதில் முதல் அட்வைஸ் தான் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதன்படி,
1. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு கட்சித் தோழர்கள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
2. பெண்கள், பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
3. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
4. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடவே கூடாது.
5. அதிகாரிகளிடம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும்
6. கிணறு, ஆபத்தான பகுதிகள் இருந்தால் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்
7. மருத்துவக் குழு, தீயணைப்புத் துறையினருக்கு உரிய வசதிகள் செய்துதர வேண்டும்
8. பேருந்து, வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டும் தொண்டர்களை அழைத்து வரவேண்டும்
என குறிப்பிட்டுள்ளார்.
தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகள் பலரிடம் வரவேற்பைப் பெற்றாலும், விமர்சனத்துக்கும் வழி வகுத்துள்ளது. விஜய் இப்போது வரை தான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் மது அருந்தும் காட்சிகளில் தாராளமாக நடிக்கும் விஜய், அரசியல் என்றதும் தனது தொண்டர்களுக்கு மது அருந்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். விஜய் தனது படங்களில் மது அருந்தாமல் நடித்திருந்தால், அவரது ரசிகர்கள் அதனை நிராகரித்திருப்பார்கள். விஜய் இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






