”திமுக ஆட்சியில் கனஜோராக கஞ்சா விற்பனை..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Oct 22, 2024 - 16:53
 0
”திமுக ஆட்சியில் கனஜோராக கஞ்சா விற்பனை..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் போலீஸாரின் சோதனையிலும் ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக, எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த 19ம் தேதி தென் மாநிலங்களுக்கு இடையேயான சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்த மாநாடு நடைபெற்றது. அதில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசியுள்ளார். 

ஆனால், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென் மாநிலங்களின் DGP-க்களிடம், அவர்களது மாநிலங்களின் வழியாக தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா, போதைப் பொருட்களை தடுப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுங்கள் என்ற வேண்டுகோளைக்கூட பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தவில்லை. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் எத்தனை ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு வந்தது? இதில் எந்தளவு குறைக்கப்பட்டது அல்லது எப்படி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற முழு விவரங்களையும் ஸ்டாலின் தெரிவிக்கத் தயாரா? மக்களை ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு உண்டு! வெளி மாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி கஞ்சா தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. இதுபற்றி பத்திரிகைகள், ஊடகங்களில் செய்திகள் வராத நாளே இல்லை. 

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் விற்பனையும், குறிப்பாக அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் கனஜோராக கஞ்சா விற்பனையும் நடைபெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன. 2 கோகைன் (Cocaine), மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் உட்பட பலவகைப்பட்ட போதைப் பொருட்கள் தமிழகம் வாயிலாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழகம் போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இந்த திராவக மாடல் அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. 

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுத்து, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகளை பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற கடத்தல்களில், திமுக-வின் அயலக அணி நிர்வாகியாக இருந்து கைதான ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. சமீபத்தில் காவல்துறை DGP அவர்கள், தமிழகத்தில் போதைப் பொருள் பிடிபட்ட விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் 2021-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2024 வரை ஆண்டு வாரியாக போதைப் பொருள் பிடிபட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் 2021ம் ஆண்டு 4 கிலோ பிடிபட்ட நிலையில், 2023ம் ஆண்டு 26 கிலோவிற்கு மேல் பிடிபட்டுள்ளதாகவும், இதுவரை கேள்விப்படாத மெத்தகுவலான் (Methaqualone) என்ற போதைப் பொருள் 8 கிலோ பிடிபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆகஸ்ட் மாதம் வரை ஹசீஸ் (Hashish) என்ற போதைப் பொருள் 77 கிலோ வரை பிடிபட்டுள்ளதாகவும், போதை மாத்திரைகள் சுமார் 36,500 பிடிபட்டுள்ளதாகவும் DGP தெரிவித்துள்ளார். விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே, தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டுள்ளார். 

இதனை மறந்த நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் எந்தவித குற்ற உணர்வும் இன்றி, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஏமாற்றி வருகிறார். கனவு கலைந்து நிஜ உலகிற்கு வரும்போது, இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இனியாவது தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow