அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தேமுதிக தொண்டர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுப் பல படுகொலைகள் நடந்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் 6 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்களை 8 பேரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரணடைந்தார்கள். ஆனால் முதல்வரின் காவல்துறை கைது செய்ததாக தவறாக சொல்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் 70 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த கொலை, உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் பட்டியல் இன மக்களுக்கு தான் வருகிறது.
மேலும் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், செல்வப்பெருந்தகை இருவரும், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனர். பட்டியல் சமூக மக்களின் பாதுகாவர்கள் என சொல்லும் திமுக, தற்போது பட்டியல் சமூக மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது என பட்டியல் சமூக மக்கள் சார்பாக கேள்வி எழுப்புகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 40/40 வென்றெடுத்ததாக முதல்வர் சொல்கிறார். ஆனால் பட்டியல் சமூக மக்களுக்கு தினமும் சேதாரம் ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திமுகவினர் தான் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் மதுவில், கிக் இல்லை என, சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநரை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம். இது இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படுகிறது என ஆளூநர் ரவி, எங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். தமிழ்தாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
விக்கிரவாண்டி தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என்பதற்கும் இடைத்தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்பதற்கும் ஒரே பொருள் தான். தமிழகத்தில் எல்லாத் தேர்தலிலும் தேமுதிக போட்டுயிட்டது. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில், திமுக பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, அராஜகம் செய்து, வெற்றி பெற்றனர்.
ஆனால் இதை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எது எதற்கோ சட்ட திருத்தம் கொண்டு வருகிறார்கள். தேர்தலில் முறைகேடு செய்பவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை? இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் போட்டியிடவில்லை” என தெரிவித்தார்.
What's Your Reaction?