வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் வெப்ப அலை உக்கிரமான நிலையில் இருந்தது. வழக்கத்தை மீறி இந்த வருடம் அளவுக்கு அதிகமான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவாகியது.
வெப்ப அலையால் காரணமாக ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஐ தாண்டியது. இதனால், மதிய நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில மாநிலங்களில், அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால், வெயில் காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோ, மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தது.
இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யக்கூடிய தென்மேற்கு கோடை பருவமழை பெய்ய ஆரம்பித்ததால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்தது. மக்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடும் தீர்ந்தது.
இந்நிலையில், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 13ஆம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் புதுச்சேரிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?