ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்தனர். இதனால், சுப்மன் கில் தலைமையிலான இளம்படை ஜிம்பாப்வே தொடரில் களம் கண்டது. அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல், ரியான் பராக் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கினர்.
ஹராரேவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பயங்கரமாக சொதப்பியது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களே எடுத்திருந்தபோது, இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 102 ரன்களுக்குள் சுருண்டது. 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை. இதனை அடுத்து, ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், ஹராரேவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சருடன் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான சுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் நிதானமாக ஆடினார். இதனால், முதல் 6 ஓவர்களில் இந்திய அணி வெறும் 36 ரன்களையே கடந்திருந்தது. அதேபோல் ஒரு கட்டத்தில் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 28 ரன்களையே எடுத்திருந்திருந்தார். ஆனால், 8ஆவது ஓவருக்கு பிறகு இருவரும் ஜிம்பாப்வே பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினர்.
33 பந்துகளில் அரைச்சதம் கடந்த அபிஷேக் சர்மா அதன் பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். அடுத்த 13 பந்துகளில் மேற்கொண்டு 50 ரன்களை சேர்த்தார். இதனால், 46 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்த அபிஷேக் சர்மா, அதற்கு அடுத்த பந்தில் அவுட்டானார். அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு களமிறங்கிய ரிங்கு சிங் அவரது பங்கிற்கு 22 பந்துகளில் [5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்] 48 ரன்கள் விளாசினார். கடைசி வரை களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் [11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 77 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.
பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள், இந்திய வேகப்பந்துக்கு பலியாகினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தாலும் வெஸ்லி மதேவெரே கடைசிவரை போராடினார். அவர் 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதேபோல், கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய லூக் ஜோங்க்வே 26 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 18.4 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 134 ரன்கள் குவித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 100 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன.