விஜய்க்கு இ.பி.எஸ் ஒரு பொருட்டே கிடையாது.. கூட்டணிக்கு தயாராக இல்லை - புகழேந்தி அதிரடி
எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்யப்பட்டு விட்டதாக பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், தற்போது ஒருமித்த கருத்துகள் இருந்தால் கூட்டணி வைத்துக்கொள்ள தயார் என்கிறார். பழனிசாமி தெரிந்து, புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் ஒற்றை காலில் நின்று வருகிறார்கள். ஜெயக்குமார் ஒன்றுக்கும் உதவாதவர், கத்திக்கொண்டு இருக்கிறார். யார் பழனிசாமியை தேடி கூட்டணிக்கு வருகிறார்கள்?
நாங்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம் என்பதால் தான், விஜய் எங்களை பற்றி பேசவில்லை என பழனிசாமி கூறி வருகிறார். அப்படி இல்லை விஜய் பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை. பழனிசாமி யாரை ஏமாற்ற நினைக்கிறார். பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பழனிசாமி முதல்வராக இருந்த போது, பல்வேறு துறைகளை தனது கையில் வைத்து இருந்தார். வேறு நபர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. யாரும் அறிவாளிகள் இல்லை. ஏன் பிறருக்கு பதவியை கொடுக்கவில்லை. ஏன் உதயநிதியை பற்றி பேச வேண்டும். பழனிசாமி விஜய் காலில் விழ கூட தயாராக உள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் மறைந்த விஜயகாந்தின் அனுதாபதிற்காக 20 சதவீதம் வாக்கு கிடைத்தது. பழனிசாமியுடன் யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். உள்கட்சியில் உள்ளவர்களை பழனிசாமி சேர்த்துக்கொள்ள முடியாது என தகராறு செய்துக்கொண்டு இருந்தால், யார்தான் கூட்டணிக்கு வருவார்கள்?
அதிமுகவை ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு குறைந்து விட்டது. அந்த நம்பிக்கை பழனிசாமியால் போய்விட்டது. அதிமுக இன்றைக்கு ஒன்றும் இல்லாமல், யாராவது கூட்டணிக்கு வருவார்களா என்கிற அளவுக்கு தேய்ந்து விட்டது. அதிமுகவை இணைக்க முடியவிட்டால் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்பேன். அதிமுக இணைப்புக்கு பழனிசாமி தான் தடையாக உள்ளார். எப்படி அதிமுக மீண்டும் வர போகிறது என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?