நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஓராண்டில் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தியது, முக்கிய பிரச்சனைகளுக்கு கண்டனம் தெரிவித்தது, கூட்டணிகளில் கவனம் செலுத்துவது, களத்தில் மக்களை சந்தித்தது, 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தை கட்சிரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்தது, 28 அணிகளை அறிவித்தது என தீவிர அரசியலை விஜய் செய்துவருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு உளவு பிரிவு அளித்த தகவலின் பெயரில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காவலர்களும், ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் என மொத்தம் 11 பேர் ஷிப்ட் அடிப்படையில் விஜய்க்கான பாதுகாப்பை வழங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு பிரிவினர் உடன் பயணித்து பாதுகாப்பு வழங்குவார்கள்.
இந்தியாவில் பிரதமர்கள், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல முக்கிய பிரமுகர்க பாதுகாப்பு கருதி மத்திய அரசு அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றது. அந்த வகையில் X,Y,Y+,Zplus, SPG என்று பல பிரிவுகளின் கீழ் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பாதுகாப்பு பிரிவுகள் அந்தந்த தனிநபருக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து வழங்கப்படுகிறது.
X பிரிவு பாதுகாப்பில் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். அதாவது ஆறு பெர்சனல் செக்யூரிட்டு ஆபிசர்கள் 8 மணி நேரம் பணியில் ஈடுப்படுவார்கள். இது மிகவும் குறைந்த அளவிலான பாதுகாப்பாகும்.
Y பிரிவு பாதுகாப்பில் ஒரு ஆயுதமேந்திய காவலர் வீட்டில் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார். இப்பிரிவில் 9 MM பிஸ்டலுடன் ஒருவரும், ஸ்டன் கன் உடன் ஒருவரும் என இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அளிப்பர். அதாவது 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். இரவு நேரங்களில் 3 அதிகாரிகள் வீட்டை சுற்றி கூடுதல் பாதுகாப்பு அளிப்பர்.
Y+ பிரிவு பாதுகாப்பு என்பது Y பிரிவை விட சற்று கூடுதல் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும். Y+ பாதுகாப்பின் கீழ், ஐந்து பணியாளர்கள், ஒரு CRPF மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இல்லத்தை சுற்றி பாதுகாப்பளிப்பர். ஆறு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
Z பிரிவு பாதுகாப்பில் வீட்டில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பர். பயணத்தின்போது bullet proof காரும், ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வாகனங்களும் உடன் செல்லும்.
Z+ பிரிவு பாதுகாப்பில் தேசிய பாதுகாப்பு படை குழுவினர் பாதுகாப்பு அளிப்பர். இப்பாதுகாப்பை பெறும் நபர் 22 பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பார்கள். இதனோடு சேர்த்து குண்டு துளைக்காத கார், 3 ஷிப்ட்களில் பாதுகாப்பு ஆகியவவை அளிக்கப்படும். ஒருவருக்கு Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்க மாதம் 50 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்த பிரிவுகளை தாண்டி, இந்தியாவில் SPG என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு ஒன்றும் இருக்கிறது. இந்த SPG பாதுகாப்பு பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும். கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கும், பிரியங்கா காந்திக்கும் வழங்கப்பட்ட SPG பாதுகாப்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த SPG பாதுகாப்பு அளிக்க ஒரு ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால், பிரதமருக்கு மட்டுமே இந்த பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற முறை அமலுக்கு வந்தது.
விஜய் எங்கு சென்றாலும் கூட்டம் அதிகமாக கூடும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் விஜய்க்கு தொண்டர்கள் பாதுகாப்பு மட்டும் போதாது என்று தற்போது Y பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.