பரபரப்பில் ஜார்கண்ட் அரசியல் களம்..புதிய கட்சி தொடக்கம்?.. சூசகமாக சொன்ன சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது

Aug 22, 2024 - 13:34
 0
பரபரப்பில் ஜார்கண்ட் அரசியல் களம்..புதிய கட்சி தொடக்கம்?.. சூசகமாக சொன்ன சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். இவர் சோரன் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஹேமந்த சோரனின் தந்தை ஷிபு சோரனுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு சம்பாய் சோரன் ஆற்றிய பணிகள் ஏராளம். ஜார்கண்டின் புலி என பரவலாக அழைக்கப்படும் சம்பாய் சோரன், ஷிபு சோரனுக்கு ஹனுமான் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார். நில மோசடி வழக்கில் தனது முதல்வர் பதவியை ஜனவரி 31ம் தேதி ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து அவர் அமலாக்கத்தூறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் தன்னுடைய தந்தைக்கு நெருங்கிய நண்பராக இருந்த சம்பாய் சோரன் பிப்ரவரி 2ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 28ம் தேதி ஹேமந்த சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் மீண்டும் ஜூலை 4ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் ஹேமந்த்.

இதனால், சம்பாய் சோரன் ஹேமந்த சோரன் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதேநேரம் சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாவும், ஹேமந்த சோரன் கைதாகியிருந்த போது சம்பாய்-க்கும் அவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இந்த தகவல்களை மறுத்தார் சம்பாய்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சியின் 6 எம்.எல்.ஏக்களுடம் சம்பாய் சோரன் டெல்லிக்கு விசிட் அடித்தார். இதனால் சற்றே அடாங்கியிருந்த வதந்திகள் மீண்டும் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் சம்பாய் சோரன் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.

இதனிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் போஸ்டர்களில் இருந்து சம்பாய் சோரனின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. இதனால்,  கட்சியில் தான் அவமதிக்கப்பட்டதாக கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சம்பாய் சோரன்.  மேலும், தனக்கு 3 வழிகள் திறந்து இருக்கிறது எனவும் அவர் அப்போதே தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க: விஜய் அரசியல் வருகை.. இந்தியா கூட்டணிக்கு பாதிப்பா? செல்வப்பெருந்தகை கொடுத்த நச் பதில்

இதன்மூலம், சம்பாய் சோரன் பாஜகவில் இணைவாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைவாரா என்ற பரபரப்பான சூழல் ஜார்க்கண்டில் நிலவி வந்தது. இந்நிலையில், சம்பாய் சோரனின் அடுத்த மூவ் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கட்சியில் இருந்து விலகும்போது தெரிவித்திருந்த 3 வழிகளை பற்றி விளக்கம் கொடுத்தார். நான் சொன்ன 3 வழிகள் ஓய்வு, புதிய கட்சி, தோழமை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவது இல்லை. நான் புதிய கட்சியை தொடங்கி அதை வலுப்படுத்துவேன். இந்த பயணத்தில் சிறந்த தோழமை கிடத்தால், அதனுடன் சேர்ந்து பயணிப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பாய் சோரனின் இந்த விளக்கத்தால் அவர் ஏதேனும் புதிய கட்சியை தொடங்குவாரோ என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow