திமுகவின் மெத்தனப்போக்கு... மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள்... விஜய பாஸ்கர் பேச்சு!
அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு டீக்கடை தோறும், பெட்டிக்கடை தோறும், மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள் என அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அன்னவாசலில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்எல்ஏ விஜயபாஸ்கர், அன்னவாசல் ஒன்றிய குழு தலைவரும் அதிமுக மாவட்ட அவைத்தலைவருமான வி ராமசாமி முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன், நகரச் செயலாளர் அப்துல் அலி மற்றும் நிர்வாகிகள் காந்தி எம்பி இளங்கோவன் வக்கீல் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர், “அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம், மாணவர்களுக்கு இலவசக் மடிக்கணினி, கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2000, இலவச மின்விசிறி, வெட் கிரைண்டர், மிக்சி என அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளித்தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு டீக்கடை தோறும், பெட்டிக்கடை தோறும், மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் இந்த திமுக அரசு விலைவாசி உயர்வு, வீட்டு வரி சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்வெட்டு, பால்விலை உயர்வு, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் ரத்து என மக்கள் மீது விரோத ஆட்சியை நடத்துகிறது. மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தேர்தல் வரும் வரை தினமும் மக்களை சந்தித்து அதிமுக சாதனைகளையும் திமுகவின் மெத்தனப்போக்கையும் எடுத்துச் சொல்லுங்கள். அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு இன்றைய நீங்கள் உழைத்திட வேண்டும். அடுத்த தீபாவளி வரை நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். வருகின்ற 26ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரவுள்ளது. இப்பொழுதே இரண்டு பச்சை இங்க் பேனாக்களை வாங்கி வைத்திருங்கள். ஒன்று எனக்கு மற்றொன்று உங்களுக்கு. உங்கள் பகுதியில் வார்டு கவுன்சிலராக, ஊராட்சி தலைவராக, கூட்டுறவு சங்கத் தலைவராக பல பதவிகளில் அமர, அதிமுக ஆட்சி அமைய, நமது பொதுச்செயலாளர் எடப்பாடி முதல்வராக வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் இன்றே தேர்தல் பணிகளை தொடங்கி இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு வாக்குகளை சேகரிக்க வேண்டும். இதுதான் நாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ரகசியம். மக்களின் அன்பை பெறுவது அதற்காக உழைப்பது தான்” என உணர்ச்சிப்பொங்க பேசினார்.
What's Your Reaction?