சென்னை: இந்திய திரையிசையில் பாடும் நிலாவாக வலம் வந்தவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இசைஞானி இளையராஜா – எஸ்பிபி கூட்டணி செய்த இசை ராஜாங்கம் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பாடலிலும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது இக்கூட்டணி. அதேபோல், எஸ்பிபி – ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான பாடல்களும் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் எனலாம்.
மறைந்த எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி, கமல், அஜித், விஜய் என நான்கு தலைமுறை நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அதேபோல், தேசிய விருது முதல் பல நூற்றுக்கணக்கில் விருதுகள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாடகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பன்முக கலைஞராக ரசிகர்களை மகிழ்வித்தவர் எஸ்பிபி. இந்நிலையில், கடந்த 2020 ஆண்டு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த போது மருத்துவமனையில் உயிரிழந்தார். எஸ்பிபி மறைந்து 3 ஆண்டுகள் கடந்தவிட்டதோடு, வரும் 25ம் தேதி அவரது நான்காவது ஆண்டு நினைவு தினம் வரவுள்ளது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், “நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து அவர்களின் மாறா அன்பை பெற்றவர் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம். அவரது நினைவை போற்றும் வகையில், எஸ்பிபி இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னையில் உள்ள காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியை எஸ்பி பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு, அவருடைய ரசிகள் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும், என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டுவர கடமைபட்டிருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பி சரணின் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. முன்னதாக இதேபோல், பல திரை பிரபலங்களின் நினைவாக அவர்கள் வாழ்ந்த தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த 2022ல் விவேக் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவர் வசித்த வீடு உள்ள சாலைக்கு விவேக் பெயர் வைக்க வேண்டும் என குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், விவேக் வாழ்ந்த வீடு உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை “சின்ன கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல் தற்போது எஸ்பி சரணின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சென்னை காம்தார் நகருக்கு எஸ்பி பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.