டார்கெட் தலைநகர்..! மா.செ. ஆகும் பிரபாகர் ராஜா? பக் பக்கில் மாண்புமிகுகள்..!

அதிரடியாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனங்களை திமுக செய்துவரும் நிலையில், தலைநகரை டார்கெட்டாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Feb 19, 2025 - 14:43
 0
டார்கெட் தலைநகர்..! மா.செ. ஆகும் பிரபாகர் ராஜா? பக் பக்கில் மாண்புமிகுகள்..!
டார்கெட் தலைநகர்..! மா.செ. ஆகும் பிரபாகர் ராஜா? பக் பக்கில் மாண்புமிகுகள்..!

திமுகவின் கட்டமைப்பை மாற்றி, மாவட்டங்களை அதிகரித்து, சீனியர்களிடம் தொகுதிகளை கைப்பற்றி, அதனை ஜூனியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உதய் தரப்பு வலுவாக வைக்க, குறிஞ்சி இல்லத்தின் கோரிக்கைகளை அறிவாலயம் ஏற்றதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் முதற்கட்டமாக, மாவட்டச் செயலாளர்களை மாற்றி அமைத்து வெளியாகும் பட்டியல், சீனியர்கள் பலரை பிபி மாத்திரை போடவைக்கும் அளவுக்கு இருக்கப்போகின்றது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

இதில், கூடிய விரைவில் பிபி மாத்திரையை அட்டையோட போடபோவது சென்னையின் மதிப்பிற்குரிய மாண்புமிகுகள் என்பதுதான் அறிவாலயத்தின் ஹாட் நியூஸ்... அமைச்சர் பதவியிலும், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் வலம் வரும் இரண்டு மாண்புமிகுகளின் கீழ் வரும் ஏரியாக்களை பிரித்து, தலைநகரை கட்டுக்கோப்பாக மாற்றுவதே தலையாய கடமையாக கருதுகிறதாம் திமுக தலைமை.... இதற்கு மிக முக்கிய காரணமாக சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைந்துவருவது மற்றும் சின்னவரின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக திமுகவின் வாக்கு சதவிகிதங்கள் சென்னையில் சரிந்தன. தென்சென்னை தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 50.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல மத்திய சென்னையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 57.36% வாக்குகள் பதிவான நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 56.65% வாக்குகள் பதிவாகின. வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் 62.03% வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் 55.11 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மூன்று தொகுதிகளிலுமே கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக வாக்கு சதவீதம் மிகக் கடுமையாக சரிந்திருந்தது, திமுக தலைமையை டென்ஷனாக்கியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தனைக்கும், சென்னை திமுகவில் ஆறு மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர். சென்னை வடக்குக்கு ஆர்.டி.சேகர், சென்னை வடகிழக்குக்கு மாதவரம் எஸ்.சுதர்சனம், சென்னை கிழக்குக்கு அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேற்குக்கு சிற்றரசு, சென்னை தென்மேற்குக்கு மயிலை த.வேலு, சென்னை தெற்குக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் என தலைநகர் சென்னைக்கு மட்டுமே 6 மாவட்டச் செயலாளர்கள் இருந்து வருகின்றனர். இருந்தாலும், தேர்தல் நேரங்களில் வாக்கு சதவிகிதம் குறைவது எப்படி? அமைச்சர்கள் களத்தில் இறங்காமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? மாவட்ட வேலைகளை கவனிப்பதை விட மாவட்டச் செயலாளர்களுக்கு அப்படி என்ன முக்கிய வேலை இருக்கின்றது? போன்ற பல கேள்விகளை கேட்டு, சரமாரியாக தலைமை திட்டி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. அதோடு, தலைநகரில் நடந்த அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அமைச்சரின் பெயரும் அடிப்பட்டதால், திமுக அரசுக்கு களங்கம் விளைக்கும் வகையில் அது அமைந்ததாகக் கூறி, அமைச்சரை தலைமை சந்திக்கவே மறுத்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் ஆறு தொகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், அதேபோல் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஐந்து தொகுதிகள் இருக்கும் நிலையில், அவற்றையும் குறைக்க தலைமைக்கு குறிஞ்சி மாளிகையில் இருந்து கோரிக்கையும் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, விரைவிலேயே அடுத்த கட்ட மாவட்டச் செயலாளர்கள் மாற்றப் பட்டியலை எதிர்ப்பார்க்கலாம் என்று கூறப்படும் நிலையில், இளைஞரணி நிர்வாகியும் சிட்டிங் எம்.எல்.ஏவுமான ஏ.எம்.வி. பிரபாகர் ராஜாவுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக குறிஞ்சி பாய்ஸ் தெரிவிக்கின்றனர். 

ஏற்கனவே, கட்சி ரீதியாக சென்னையை 6 மாவட்டங்களாக பிரித்துள்ள தலைமை, மேலும் இரண்டு மாவட்டங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில், ஒன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகனான  ஏ.எம்.வி. பிரபாகர் ராஜாவுக்கும், வடசென்னையில் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் மாவட்டத்திற்கு இளைஞரணியில் உள்ள மேலும் ஒரு பிரமுகருக்கும் வாய்ப்புகள் வழங்க்கபட உள்ளதாக அறிவாலய பட்சி கூறுகின்றது. 

ஏ.எம்.வி. பிரபாகர் ராஜாவை பொறுத்தவரை, 2021 சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே திமுகவிற்குள் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பிரபாகர் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே. நகர் தனசேகரனை சந்திக்க சென்றிருந்தார். அப்போது தனசேகரனுக்கு சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவரது ஆதரவாளர்கள், பிரபாகர் ராஜாவின் காரை அடித்து நொறுக்கினர். அது மட்டுமல்லாமல், அறிவாலயத்திற்கே தனது ஆதரவாளர்களுடன் வந்த தனசேகரன், திமுக வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வேட்பாளரை மாற்றவில்லை என்றால் விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 80 சதவிகீத திமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்வோம் என்று முழக்கமிட்டனர். ஒரு வழியாக தனசேகரனை சமாதானப்படுத்தி அனுப்பிய தலைமையிடம், மாவட்டச் செயலாளராக தன்னை நியமிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக தனசேகரன் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பிரபாகர் ராஜாவுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க தலைமை திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தனசேகரனை கடும் டென்ஷனாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமைக் கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்கப் போவதாகவும், ஒருவேளை பிரபாகர் ராஜா மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டால் சென்னை திமுகவில் மோதல் வெடிக்கும் என்று தனசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, தலைநகர் சென்னையில், திமுக தலைமை செய்யப்போகும் மாற்றங்கள் என்ன? அதனால் தலைமை சந்திக்கப்போகும் விளைவுகள் என்னென்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow