Minister R Gandhi : உதயநிதியை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.. சூசகமாக தெரிவித்த அமைச்சர்

Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

Aug 11, 2024 - 20:23
Aug 12, 2024 - 22:58
 0
Minister R Gandhi : உதயநிதியை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.. சூசகமாக தெரிவித்த அமைச்சர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி

Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : ராஜஸ்தான் இளைஞர் சங்க கல்வி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த கல்லூரி மாணவர்களின் கல்விக்கான உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இந்நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, ”இந்த நிகழ்விற்காக அழைப்பு வந்த பொழுது கூட ராஜஸ்தான் மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த புத்தகம் வழங்கப்படும் என நினைத்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது பெருமையளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.

இலவசம் புத்தகம் வழங்குவது, மாணவர்களுக்கு மகத்தான ஒரு திட்டமாக இந்த திட்டம் விளங்குகிறது. நாட்டிற்கு தேவை கல்வி, சுகாதாரம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த இரண்டு துறை தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. கல்வி, சுகாதாரம் போன்றவை சிந்தித்து, சிந்தித்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

என்னிடம் வரும் மாணவர்களுக்கு என்னால் முடியும் உதவிகளை தொடர்ந்து நான் செய்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகளின் பள்ளிகள் தான் எங்களுடைய கோவில். கலைஞர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

நம் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டு முன்னேற்றத்திற்கு மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மக்கள் வரி பணத்தை வீணாக்க மாட்டார் கலைஞர், அண்ணா கலைஞர் அவர்களை மிஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். என்னால் முடிந்த உதவிகளை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

இதற்கிடையில் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே, “தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்” என தெரிவித்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயலாற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வழங்கப்படலாம் என ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து இருந்து வந்தது.

இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கையில், "துணை முதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்து வருகிறது; ஆனால் அது பழுக்கவில்லை" என்று பதிலளித்தார்.

இதற்கிடையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்’ என குறிப்பிட்ட அவர், பிறகு சுதாரித்துக் கொண்டு, “19ஆம் தேதிக்குப் பிறகுதான் அப்படி கூற வேண்டும்” என்றார். இந்நிலையில் அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின் என சூசகமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow