நீங்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் பாஜக உங்களை ஆதரிக்கும்... No Doubt! - பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன்
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது, என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் பேசினார்.
சிவகாசி மாரியம்மன் கோயில் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து எழுச்சி மாநாடு நேற்று (நவ 24) இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார் மற்றும் மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “ சிவகாசியில் தீப்பெட்டி தொழில் தொடங்கி நூற்றாண்டு நிறைவு பெறும் சூழலில், சீனாவின் சிகார் லைட்டர்களுக்கு தடை விதித்து பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய பிரதமர் மோடிக்கும், அதற்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோருக்கும் சிவகாசி மக்கள் சார்பாக நன்றிகள். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் சிவகாசி பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. தீப்பெட்டி தொழிலின் அடுத்தக் கட்டமாக பட்டாசு மற்றும் அச்சுத் தொழில்கள் உருவானது. இன்று ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் அளவுக்கு பட்டாசு தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது.
சிவகாசி தொழில் வளர்ச்சிக்கு அரசு காரணமல்ல. இது மக்களின் அனுபவம் மற்றும் அறிவின் மூலம் உருவானது. மற்ற நாடுகளில் கல்வி நிலையங்கள் தொழிலை உருவாக்கும். ஆனால் சிவகாசியில் தொழில்கள்தான் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. தீபாவளியை ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்க சில தன்னார்வ நிறுவனங்கள் வேலை செய்தன. முதலில் சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பினர். ஆனால் தமிழகத்தில் அதிக படிப்பறிவு உள்ள மாவட்டமாக, உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை உள்ள மாவட்டமாக விருதுநகர் உள்ளது என்பதே உண்மை. தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கு எதிராக நான் சுதேசி இயக்கத்தில் இருந்தபோது தொடரப்பட்ட வழக்கில், பொய் தகவல் பரப்பியதற்காக ஒரு தொண்டு நிறுவன தலைவர் சிறைக்கு சென்றார்.
2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் சீன பட்டாசுகள் தடை செய்யப்படவில்லை. பிரதமர் மோடி பதவியேற்ற 6 மாதத்தில் சீன பட்டாசுக்கு தடை விதித்தார். இந்த உண்மை சிவகாசி மக்களுக்கு தெரிந்து இருந்தால் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஜிஎஸ்டி என்பது புதிய வரி அல்ல. 17 வகையான வரிகளை இணைத்து ஒருங்கிணைந்த புதிய முறைதான் ஜிஎஸ்டி. அதில் பட்டாசு ஆடம்பர பொருட்களுக்கான 28 சதவீத பிரிவில் சிக்கிக் கொண்டது. அதை 18 சதவீதமாக மாற்றுவதற்கு அப்போது வர்த்தக துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் மூலம் தமிழக பாஜக நடவடிக்கை எடுத்தது.
தற்போது குழந்தைகள் பட்டாசு வெடிப்பதால் நாங்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக வாதாடியதின் விளைவாக பசுமை பட்டாசு உருவானது. இதனால் கடந்த ஆண்டு உற்பத்தி செய்த அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாஜகவினரை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?